தமிழக முதலமைச்சர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்ததற்காக கருணாஸ் எம்.எல்.ஏ இன்று காலை கைது செய்யப்பட்டார்.
நடிகர் கருணாஸ், முக்குலத்தோர் புலிப்படை என்ற அமைப்பை நடத்தி வருகிறார். இந்த அமைப்பு கடந்த 16ம் தேதி சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய நடிகரும் திருவாடனை தொகுதி எம்.எல்.ஏவுமான கருணாஸ், “காவல்துறையினர் யார் மீது வேண்டுமானாலும் குண்டாஸ் போடுகிறார்கள். கை, காலை உடையுங்கள் என்று சொல்கிறார்கள். ஒருவரை அடித்து மிரட்டி கை, காலை உடைக்கச் சொல்வது என்ன நியாயம்?. முக்குலத்தோர் சமுதாயத்தினரின் கை, கால்களை உடைப்பவர்களின் கை, கால்களை உடையுங்கள்; பாத்துக்கலாம். அதிகார திமிர் தானே உங்களை இவ்வாறு செய்ய வைக்கிறது?. நீ கொலை கூட பண்ணு, என்னிடம் சொல்லிவிட்டு பண்ணு (தொண்டர்களிடம்). கொலை செய்தால் அதில் நியாயம் இருக்க வேண்டும். உன்னை வாழ விடவில்லை என்றால் கோபம் வரத்தான் செய்யும். தூங்கி எழுந்து பல்துலக்கும் நேரத்தில் நாங்கள் கொலை செய்வோம். ஃபிலிம் காட்டவில்லை, வழக்கு, ஜெயில், பெயில் எல்லாம் வரும், பார்த்துக்கலாம். சில போலீஸ் அதிகாரிகள் கூலிங் கிளாஸ் போட்டுக் கொண்டு ரவுடிகளை போல் நடந்து கொள்கிறார்கள். அவர்களுக்கு உயர் அதிகாரிகள் அறிவுரை கூற வேண்டும்” என்று பேசி இருந்தார். முதலமைச்சர் பழனிசாமி குறித்தும் சில கருத்துக்களை பேசினார் கருணாஸ்.
காவல்துறையினரை மிரட்டும் வகையில் கருணாஸ் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியது. சென்னையில் ஆர்ப்பாட்டத்தின் போது முதல் வர், காவல்துறையினர் குறித்து அவதூறாக பேசியதாக கருணாஸ் மீது பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் மீது 8 பிரிவுக ளில் நுங்கம்பாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனையடுத்து, கருணாஸிடம் காவல் துறையினர் விசாரணை நடத்த திட்டமிட்டனர்.
இதனிடையே, கருணாசின் பேச்சு, முதலமைச்சரின் கவனத்திற்கு சென்றிருப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்திருந்தார். மேலும், சட்டத்தை மீறி யார் பேசினாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதி அளித்தார்.
கருணாஸின் பேச்சுக்கு வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை மற்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தனது பேச்சுக்கு அவர் வருத்தம் தெரிவித்திருந்தார். இருந்தும் அவர் கைது செய்யப்படுவார் என்று கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று காலை சாலிகி ராமத்தில் உள்ள அவர் வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார். நுங்கம்பாக்கம் உதவி ஆணையர் முத்துவேல் பாண்டியன் தலைமையில் போலீசார் அவரை கைது செய்தனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸ், ‘என் மீது கொலைமுயற்சி வழக்கு பதிவு செய்துள்ளனர். சட்டமன்ற உறுப்பினராக இந்த வழக்கை நீதிமன்றத்தில் சந்திக்க தயாராக இருக்கிறேன்’ என்றார்.