கலைஞரின் படத்திறப்பால் தமிழ்நாடு சட்டமன்றம் ஜனநாயகத்துக்கு அழகூட்டியுள்ளதாக மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் புகழாரம் சூட்டியுள்ளார்.
தமிழக சட்டசபையின் நூற்றாண்டு விழா மற்றும் சட்டசபை அரங்கில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவப்பட திறப்புவிழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவிற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தலைமை தாங்கினார். முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலை வகித்த நிலையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவப்படத்தை திறந்து வைத்தார்.
இதன்மூலம் சட்டசபையில் 16-வது தலைவராக கருணாநிதியின் படம் திறக்கப்பட்டுள்ளது. இவ்விழாவில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் தலைவர்கள், நீதிபதிகள், உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். சட்டப்பேரவையில் கருணாநிதியின் உருவப்படம் திறக்கப்பட்டது குறித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ட்விட்டரில் வாழ்த்தியுள்ளார்.
அதில், "இந்திய நாடாளுமன்றம் ஜனநாயக விரோதத்தின் அடையாளமானது. தமிழ்நாடு சட்டமன்றம் ஜனநாயகத்துக்கு அழகூட்டியுள்ளது" என தமிழ்நாடு சட்டப்பேரவையில் கலைஞர் கருணாநிதியின் படத்திறப்பு குறித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ட்விட்டரில் புகழாரம் சூட்டியுள்ளார்.