செய்தியாளர்: விக்னேஷ்முத்து
முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவையொட்டி, அவரது உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயத்தை மத்திய அரசு வெளியிட உள்ளது. சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று மாலை நடைபெறும் நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு நாணயத்தை வெளியிடுகிறார்.
இதையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடி கடிதம் எழுதி உள்ளார்.
அந்த கடிதத்தில், ”முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்தியாவின் தலைசிறந்த தலைவர்களின் ஒருவரான கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் முக்கியமான தருணம் இது. கலைஞர் கருணாநிதி இந்திய அரசியல், இலக்கியம், சமூகத்தில் ஒரு உயர்ந்த ஆளுமை தமிழகத்தின் வளர்ச்சி தேசிய முன்னேற்றம் ஆகியவற்றில் எப்போதும் நாட்டம் கொண்டிருந்தார். பல சதாப்தங்களாக மக்களால் பலமுறை தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முதலமைச்சராக நமது நாட்டின் வரலாற்றில் அழியாத முத்திரையை பதித்தவர் கலைஞர்.
இலக்கியத் திறன் மற்றும் அவரது படைப்புகளால் பிரகாசித்தது மற்றும் அவருக்கு கலைஞர் என அன்பான பட்டத்தை பெற்றுத் தந்தது. இந்த முக்கியமான தருணத்தில் கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு எனது இதயபூர்வமான அஞ்சலி. 2047-ம் ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியாவை கட்டி எழுப்பும் நோக்கில் நாம் நம்பிக்கையுடன் முன்னோக்கி செல்லும் பொழுது கலைஞர் கருணாநிதி போன்ற தலைவர்களின் தொலைநோக்கு பார்வையும் சிந்தனைகளும் தேசத்தின் பயணத்தை தொடரும்.
முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழா வெற்றியடையட்டும்” எனக் கூறப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்த்து கடிதத்திற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனமார்ந்த நன்றி தெரிவித்துள்ளார்.