செய்தியாளர்: சுப.முத்துப்பழம்பதி
புதுக்கோட்டையில், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழகத்தில் பள்ளி மாணவர்களிடையே போதைப் பொருள் கலாசாரம் மிகவும் அதிகரித்து வருவது வேதனைக்குரியதாக உள்ளது. எங்கிருந்து வருகிறது என்பது குறித்து அறிந்து அரசு அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மத்திய அரசு, மூன்று மொழிக் கொள்கையை ஏற்றுக்கொண்டால் மட்டுமே நிதி கொடுப்போம் என்று கூறுவது சரியல்ல. எந்த மொழியும் படிக்கலாம் என்று அவர்கள் கூறினாலும் அதை நான் இந்தி திணிப்பாகத்தான் பார்க்கிறேன். புதிய கல்விக் கொள்கையில் விஞ்ஞானத்திற்கு மாறான கருத்துகள், நமது வாழ்வுரிமைக்கு எதிரான கருத்துகள் ஆகியவை அதிகம் உள்ளன.
இனி ஈவிகேஎஸ் இளங்கோவின் கருத்துக்கோ, கேள்விக்கோ பதில் சொல்வதில்லை என்ற கொள்கை முடிவை நான் எடுத்துள்ளேன்- அரசுப் பள்ளிகளில் மதம் சார்ந்த பிரச்சாரங்கள் நடந்தது கண்டனத்துக்குரியது, மாணவர்களிடையே மூடநம்பிக்கையை வளர்க்கும் வகையில் பிரச்சாரம் செய்தது கண்டனத்துக்குரியது,
கூவம் விவகாரத்தில் வெள்ளை அறிக்கையை நான் கேட்டு மேயருக்கு கடிதம் அனுப்பி இருந்தேன். அவர்களிடமிருந்து திரும்ப பதில் வரவில்லை. பதில் வரும் என எதிர்பார்க்கின்றேன். சென்னை மேயர் மாநகராட்சி கூட்டத்தில் 829 கோடி ரூபாய் கூவத்திற்காக செலவு செய்துள்ளோம் என்று கூறினார். அதன் அடிப்படையிலேயே செலவு செய்த தொகை எவ்வளவு எதற்காக செயல் செய்தீர்கள் என்பது குறித்து வெள்ளை அறிக்கை கேட்டுள்ளேன்.
நடிகர் விஜய் குறித்த எனது கருத்து இதுவரை மாறவில்லை. அவரது கொள்கைகள் கோட்பாடுகள் செயல்பாடுகள் குறித்து தெரிவிக்கட்டும். அவரைக் கண்டு திமுக அஞ்சுகிறது என்று கூறுவது தவறு. காவல்துறை கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தால் அனுமதி கட்டாயம் அளிப்பார்கள். மாநாடு நடக்கும். அதன் பிறகு ஒண்ணும் நடக்காது. அனுமதி கிடைக்கவில்லை என்றால் புதுக்கோட்டையில மாநாட்டை வைத்துக் கொள்ளட்டும்.
அதிமுக ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட தொழில் முதலீடு குறித்து அதிமுகவும், திமுக ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட தொழில் முதலீடு குறித்து திமுகவும் வெள்ளை அறிக்கை கொடுக்க வேண்டும். இதற்கு நான் நடுவராக இருந்து செயல்படுகிறேன். மல்யுத்த வீராங்கனைகள் காங்கிரஸில் சேர்ந்தது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், பெண்களுக்கு பாதுகாப்பான இயக்கம் காங்கிரஸ்தான்" என்று கார்த்தி சிதம்பரம் கூறினார்.