செய்தியாளர்: ம.ஜெகன்நாத்
முன்னாள் அமைச்சரும், தற்போதைய பாஜக சட்டமன்ற உறுப்பினருமான முனிரத்னா, ஒப்பந்ததாரரை சாதி ரீதியாக பேசி, கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், முனிரத்னா மீது பெங்களூருவைச் சேர்ந்த பெண் ஒருவர் ராம்நகரா மாவட்ட காவல் நிலையத்தில் பாலியல் புகார் அளித்துள்ளார்.
அந்த பெண்ணின் புகாரைத் தொடர்ந்து, சட்டமன்ற உறுப்பினர் முனிரத்னா உள்பட 7 பேர் மீது பாலியல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம்சாட்டிய பெண்ணிடம் காவல்துறை துணை ஆணையர் வாக்குமூலம் பெற்றுள்ளார். அவரின் வாக்குமூலத்தில், தனியார் விடுதியில் சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்டோர் பாலியல் வன்கொடுமை செய்ததாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், முனிரத்னாவுக்கு எதிராக ஒக்கலிகா மற்றும் பட்டியல் சமூக அமைப்புகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், இந்த வழக்கை பாஜகவுக்கு எதிரான ஆயுதமாக காங்கிரஸ் கையில் எடுத்துள்ளது.