கர்நாடக மாநிலம் அங்கோலா அருகே சிரூரு பகுதியில் கடந்த 17ஆம் தேதி பெய்த கன மழையின் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. சாலையோரம் இருந்த டீக்கடை, வீடுகள் இந்த நிலச்சரிவில் புதைந்தன. தேநீர் அருந்த லாரிகளை நிறுத்தியிருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓட்டுநர்கள் சிக்கிக் கொண்டனர்.
இதில், கிருஷ்ணகிரியைச் சேர்ந்த ஓட்டுநர் முருகனின் உடலும், நாமக்கல்லை சேர்ந்த சின்னண்ணண் உடலும் மீட்கப்பட்டன. நாமக்கல்லைச் சேர்ந்த ஓட்டுநர் சரவணன் என்னவானார் என்று தெரியவில்லை. ஒருவாரம் கடந்தும் சரவணன் பற்றிய தகவல் கிடைக்காததால், அவரது குடும்பத்தினரின் துயர நிலையை புதியதலைமுறை பதிவு செய்தது.
இதனிடையே, விபத்து நிகழ்ந்த இடத்தில் கிடைத்த உடல் பாகங்கள், சரவணனின் தாயாரின் டிஎன்ஏ மாதிரியுடன் பரிசோதிக்கப்பட்டது. அந்த உடல் பாகங்கள் சரவணனுடையது தான் என அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர். சரவணனின் தாயார், கர்நாடக மாநிலம் அங்கோலா சென்றுள்ளார்.