செய்தியாளர்: மணி
கர்நாடகாவை சேர்ந்தவர்கள் விஜேந்திர ராவ் - வித்யாவதி தம்பதியினர். இவர்கள் தங்கள் மகனின் திருமணத்திற்காக ஈரோடு வந்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஜவுளிகளை வாங்கியுள்ளனர். பின்னர் கர்நாடகா செல்வதற்காக ஈரோடு ரயில் நிலையத்திற்கு வந்த போது அங்கிருந்த அதிகாரிகள் குழுவினர் அவர்களை சோதனை செய்துள்ளனர்.
அப்போது விஜேந்திர ராவ் வைத்திருந்த ஜவுளிகளுக்கு உரிய ஆவணங்கள் இல்லை எனக் கூறி அவற்றையும் 40 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தையும் பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது. ஆனால், தன்னிடம் அனைத்து ஆவணங்களும் இருந்தும் ஜவுளிகளை பறிமுதல் செய்துள்ளதாக விஜேந்திரராவ் தெரிவித்தார்.
இது தொடர்பாக தேர்தல் பிரிவு அதிகாரிகளிடம் கேட்டபோது, விஜேந்திர ராவ் உரிய ஆவணங்களை காண்பிக்காமலும் முன்னுக்குப்பின் முரணாக பேசியதாலும் பறிமுதல் நடவடிக்கை மேற்கொண்டதாக தெரிவித்தனர். மேலும், பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் மாவட்ட தேர்தல் அலுவலருக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் அங்கு உரிய ஆவணங்களை காண்பித்து அவற்றை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தனர்.