கர்நாடகாவில், 15 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது.
கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழக் காரணமாக இருந்த, அந்த இரு கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் 17 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். அவர்கள் மீண்டும் தேர்தலில் போட்டியிடலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை அடுத்து, தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்களில் 16 பேர் கடந்த மாதம் பாரதிய ஜனதாவில் இணைந்தனர்.
17 பேர் தகுதி நீக்கத்தால் காலியாக உள்ள தொகுதிகளில், 15 தொகுதிகளில் இன்று இடைத்தேர்தல் நடைபெறுகின்றது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை ஆறு மணிக்கு முடிவடைகின்றது. வாக்குப்பதிவுக்கென 4 ஆயிரத்து 185 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு்ள்ளன. இடைத்தேர்தலில் வாக்களிக்க 37 லட்சத்து 78 ஆயிரம் பேர் தகுதி பெற்றுள்ளனர்.
இடைத்தேர்தல் நடைபெறும் 15 தொகுதிகளில், 12 இடங்கள் காங்கிரஸ் வசமும், எஞ்சிய மூன்று இடங்கள் மதச்சார்பற்ற ஜனதா தளம் வசமும் இருந்தன. தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் 16 பேரில், 13 பேருக்கு பாரதிய ஜனதா சார்பில் இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் 2018 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வென்ற அதே தொகுதிகளில் இம்முறையும் களமிறக்கப்பட்டு்ள்ளனர். இதில் அனைத்துத் தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. மதச்சார்பற்ற ஜனதா தளம் 12 இடங்களில் மட்டுமே போட்டியிடுகின்றது. இந்தத் தொகுதிகளில் 9 பெண்கள் உள்பட 165 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
இடைத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் 9ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. 225 உறுப்பினர்களைக் கொண்டுள்ள கர்நாடக சட்டப்பேரவையில் ஆளும் கட்சியான பாரதிய ஜனதாவுக்கு 105 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இன்று நடைபெறும் இடைத்தேர்தலில் பாரதிய ஜனதா குறைந்தபட்சம் 6 தொகுதிகளில் வெற்றி பெற்றால்தான் அக்கட்சியின் ஆட்சி தொடர முடியும் என்ற சூழல் உள்ளது.