'மக்கள் பணி முக்கியம்..மணவிழா அல்ல' திருமணத்தை ஒத்திவைத்த பெண் காவல் அதிகாரி

'மக்கள் பணி முக்கியம்..மணவிழா அல்ல' திருமணத்தை ஒத்திவைத்த பெண் காவல் அதிகாரி
'மக்கள் பணி முக்கியம்..மணவிழா அல்ல' திருமணத்தை ஒத்திவைத்த பெண் காவல் அதிகாரி
Published on

ஊரடங்கு நேரத்தில் மக்களைப் பாதுகாப்பதே முக்கியம் எனக் கூறி தனது திருமணத்தை ஒத்திவைத்துள்ளார் கர்நாடக பெண் காவல் அதிகாரி.

கண்ணுக்குப் புலப்படாத எதிரியான கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில், போர் முனையில் உள்ள சிப்பாய்களைப் போல, மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்டோர் பணியாற்றி வருகின்றனர்.

இந்த இக்கட்டான காலக்கட்டத்தில் சிலர் தங்களது சொந்த காரியங்களைக் கூடத் தள்ளி வைத்து வருகின்றனர். அந்த வகையில், கர்நாடகா மாநிலம் மாலவள்ளி பகுதியில், காவல்துறை துணை கண்காணிப்பாளராக பணியாற்றி வரும் பிருத்வி, தனது திருமணத்தை ஒத்திவைத்தது தெரிய வந்துள்ளது. அவருக்கும், ஐ.ஏ.எஸ் அதிகாரியான டயமாப்பா என்பவருக்கும் கடந்த ஐந்தாம் தேதி திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதனிடையே, பிருத்வி பணிபுரிந்துவரும் மாலவள்ளிப் பகுதி கொரோனாவின் ஹாட் ஸ்பாட்டாக அறிவிக்கப்பட்டது. இதன் எதிரொலியாக தனது திருமணத்தை ஒத்திவைத்தார், அந்தப் பெண் அதிகாரி. மக்களைப் பாதுகாக்கும் பணிதான் தற்போது முக்கியமே தவிர, தனது மணவிழா அல்ல என்று கூறியுள்ளார், பிரித்வி. இவரது முடிவை காவல்துறையினர், நடிகையும் கர்நாடக மாநில எம்பியுமான சுமலதா உள்ளிட்ட பலரும் பாராட்டி உள்ளனர்.

அவர் குறிப்பிட்டுள்ளப் பதிவில் “பிருத்வியின் இந்த செயல்பாடு அவர் எந்த அளவுக்கு நேர்மையானவர், உறுதியானவர் என்பதைக் காட்டுகிறது. மாலவள்ளிப் பகுதியின் மக்களுக்கு தற்போது அவர் எடுத்துக்காட்டாக மாறியுள்ளார்” என்று கூறியுள்ளார். இது குறித்து பிருத்வி கூறும் போது “ இந்தக் காலத்தில், சமூகத்தில் எனது இருப்பு மிக முக்கியமானது. கொரோனா அதிகமாகப் பரவும் பகுதியாக மாலவள்ளி அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இங்கு 11 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்”. என்றார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com