காரைக்குடி அருகே அமராவதி புதூர் கால்நடை மருந்தகம் செயல்பாட்டில் இல்லாமல், கட்டிடங்கள் சேதம் அடைந்த நிலையில், அது சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி போனதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அடுத்த அமராவதி புதூர் பகுதி விவசாயிகள் அதிகம் வசிக்கும் கிராமமாக இருந்து வருகிறது. விவசாயிகள் வளர்க்கும் கால்நடைகளின் மருத்துவ வசதிக்காக அமராவதிப் புதூரில் கடந்த 1994ஆம் ஆண்டு கால்நடை மருந்தகம் திறக்கப்பட்டது. கடந்த 2015ஆம் ஆண்டு வரை செயல்பட்டு வந்த கால்நடை மருத்தகம், பின்பு மருத்துவர்கள் முறையாக வராததால் செயலற்று போனது. இதனால் இப்பகுதி விவசாயிகள் தங்களது கால்நடைகளுக்கு மருத்துவம் பார்க்க பத்து கிலோமீட்டர் தூரம் அலைய வேண்டிய அவல நிலை ஏற்பட்டது.
உடனடி மருத்துவம் பார்க்க முடியாமலும், கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வசதி இல்லாததாலும் மழைக்காலங்களில் நூற்றுக்கணக்கான ஆடு, மாடுகள் உயிரிழந்து வருவதாக வேதனை தெரிவிக்கும் விவசாயிகள்,தற்போது பராமரிப்பின்றி கிடக்கும் கால்நடை மருந்தகம் சமூக விரோதிகளின் கூடாரமாகவும் இருந்து வருவதாக வேதனை தெரிவிக்கும் நிலையில், விவசாயிகளின் நலன் கருதி கால்நடை மருத்துவமனையை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையும் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குனர் நாகராஜனிடம் கேட்டபோது, அமராவதிபுதூர் கால்நடை மருத்துவமனையை செயல்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
- நாசர்