மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை தொடர்பாக நடிகர் சூர்யா பேசிய கருத்துக்கள் சரியானவை என கன்னியாகுமரி தொகுதி மக்களவை உறுப்பினர் வசந்தகுமார் பேட்டியளித்துள்ளார்.
கேரள மாநிலம் கொல்லம் கடல் பகுதியில் மீன் பிடிக்க சென்ற 5 மீனவர்களில் இருவர் உயிருடன் கரை திரும்பிய நிலையில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இருவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. மாயமான மீனவர்களின் உறவினர்களை சந்தித்த கன்னியாகுமரி தொகுதி மக்களவை உறுப்பினர் வசந்தகுமார், தக்கலை அருகே செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது பேசிய அவர், “மத்திய அரசின் கல்வி கொள்ளை கிராமப்புற மக்களை அச்சுறுத்தும் வகையில் உள்ளது. நடிகர் சூர்யா கூறிய கருத்து சரியானது தான். மாயமான மீனவர்களை தேடுவது குறித்து வெளியுறவு துறை அமைச்சரிடம் பேசி கடலோர காவல்படை மூலம் மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் சரக்கு பெட்டக துறைமுகம் அமையாது. தற்போதைய மத்திய அரசு அது தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. மாயமான மீனவர்களை தேடுவது குறித்து வெளியுறவு துறை அமைச்சரிடம் பேசி, கடலோர காவல்படை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்றார்.