ஆசிரியர்கள் தனது மகனை அடித்து துன்புறுத்தியதால் மூன்று குழந்தைகளையும் ஒரு தாய் பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டில் அடைத்து வைத்த சம்பவம் கன்னியாகுமரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி பிரேமா. இந்த தம்பதியருக்கு 3-மகன்கள் உள்ளனர். இந்நிலையில் மூன்று மகன்களையும் பெற்றோர் 4 ஆண்டுகளாக பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டிலேயே பூட்டி வைத்துள்ளதாக ஆத்திவிளை பேரூராட்சி தலைவருக்கு நேற்று மாலை தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து குழந்தைகள் நல மையத்தினர் மற்றும் இரணியல் போலீசாருக்கு பேரூராட்சி தலைவர் தகவல் கொடுத்த நிலையில், அதிகாரிகள் அந்த வீட்டிற்கு விரைந்து சென்று விபரம் அறிய முயன்றுள்ளனர். அப்போது அவர்களை தடுத்து நிறுத்திய குழந்தைகளின் தாய் பிரேமா, அதிகாரிகளை வீட்டிற்குள் அனுமதிக்காமல் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
தொடர்ந்து அதிகாரிகள் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது மூன்று சிறுவர்களும் தனித்தனியே வீட்டில் பூட்டி வைக்கப்பட்டிருந்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அந்த 3 மாணவர்களும் 4 ஆண்டுகளாக பள்ளிக்கு செல்லாமல் தாய் கட்டுப்பாட்டில் வீட்டிலேயே இருப்பது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து தாய் பிரேமாவிடம் அதிகாரிகள் விசாரித்தபோது, அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பிரேமா, தனது மகன், நான்கு ஆண்டுகளுக்கு முன் இரணியல் அரசு பள்ளிக்கு சீருடை அணியாமல் சென்றதால் ஆசிரியர்கள் அவனை அடித்து துன்புறுத்தியதாகவும், அதன்பிறகு மகன்களை பள்ளிக்கு அனுப்பினால் அவர்களை ஏதாவது செய்து விடுவார்களோ என்ற அச்சத்தில் 4 ஆண்டுகளாக பள்ளிக்கு அனுப்பவில்லை என்றும் கூறியதோடு, மகன்களை அதிகாரிகளுடன் அனுப்ப மறுத்து விட்டார்.
ஆசிரியர்கள் தனது மகனை அடித்து துன்புறுத்தியதால் மூன்று குழந்தைகளையும் ஒரு தாய் பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டில் அடைத்து வைத்த சம்பவம் கன்னியாகுமரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.