கன்னியாகுமரி மாவட்டம் கல்லுவிளை பகுதியைச் சேர்ந்தவர் லாசர் (69). இவர், தக்கலை பத்மநாபபுரம் பகுதியில் பெட்ரோல் பங்க் ஒன்றை நடத்தி வருகிறார். அதில் நெய்யூர் பகுதியைச் சேர்ந்த நிஜில் பிரேம்சன் என்பவர் கடந்த 7 வருடங்களாக மேலாளராக பணியாற்றி வருகிறார்.
லாசர் தனது மகளுக்கு திருமண ஏற்பாடுகளை செய்து வந்த நிலையில், கடந்த 18 மாதங்களாக பெட்ரோல் பங்க்கின் முழு பொறுப்பையும் மேலாளர் நிஜில் பிரேம்சனிடம் ஒப்படைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதில் பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் விற்பனை அதிக அளவில் இருந்தும் அதற்கான பணம் லாசரின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படவில்லை என தெரிகிறது.
இதனால் சந்தேகமடைந்த லாசர், தனது போன்-பே கணக்கு மூலம் வங்கிக்கு வந்த தொகையின் விபரங்களை கேட்டு பெற்றுள்ளார். அப்போது அதில், குறைந்த அளவே பண பரிவர்த்தனை இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதைத் தொடர்ந்து தனது பெட்ரோல் பங்க்கில் வைக்கப்பட்டிருந்த போன் பே பார் கோடுகளை ஆய்வு செய்து விபரங்களை கேட்டறிந்தார். இதையடுத்து ரூ. 23,39,727 ரூபாயை தனது வங்கிக் கணக்கில் பெற்று மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனையடுத்து மோசடி குறித்து லாசர் தக்கலை காவல் நிலையத்தில் புகாரளித்தார். இந்த புகாரின் பேரில், நிஜில் பிரேம்சன் மீது நம்பிக்கை மோசடி, கொலை மிரட்டல், இந்திய தண்டனை சட்டம் 408, 420, 506 (1) ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவாக உள்ள நிஜில் பிரேம்சனை தேடி வருகின்றனர்.