கன்னியாகுமரி: நடுக்கடலில் பயங்கரமாக மோதிக் கொண்ட தமிழக, கர்நாடக மீனவர்கள் - காரணம் என்ன?

கன்னியாகுமரி: நடுக்கடலில் பயங்கரமாக மோதிக் கொண்ட தமிழக, கர்நாடக மீனவர்கள் - காரணம் என்ன?
கன்னியாகுமரி: நடுக்கடலில் பயங்கரமாக மோதிக் கொண்ட தமிழக, கர்நாடக மீனவர்கள் - காரணம் என்ன?
Published on

குமரி நடுக்கடல் பகுதியில் குமரி மாவட்ட விசைப்படகு மீனவர்கள் மற்றும் கர்நாடக விசைப்படகு மீனவர்களுக்கிடையே மோதல் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் முட்டம் மீன்பிடி துறைமுகங்களைச் சேர்ந்த 700-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் தமிழக பகுதியில் உள்ள குமரிக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் சுமார் 7-நாட்கள் முதல் 15-நாட்கள் வரை நடுக்கடல் பகுதியில் தங்கி ஆழ்கடல் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த பகுதிகளில் மீன்பிடி தொழிலில் ஈடுபடும் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் தமிழக அரசால் பிடிப்பதற்கு தடை செய்யப்பட்ட சாவாளை மீன்களை அத்துமீறி பிடித்துச் செல்வதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தடை செய்யப்பட்ட சாவாளை மீன்பிடி தொழிலில் ஈடுபட்ட மூன்று கர்நாடகா விசைப்படகுகளை குமரி விசைப்படகு மீனவர்கள் சிறைபிடித்தனர்.

இதையடுத்து அந்த படகுகளை பறிமுதல் செய்த மீன்வளத்துறை அதிகாரிகள், விசைப்படகு உரிமையாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்ததோடு அதில் இருந்த மீன்களை 25 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்து நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக சூறைக்காற்று வீசியதால் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் இருந்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று முதல் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். அப்போது குமரி நடுக்கடல் பகுதியில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் தடை செய்யப்பட்ட சாவாளை மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதைக்கண்ட குமரி விசைப்படகு மீனவர்கள் அவர்களை தட்டி கேட்டதோடு விசைப்படகை சிறைபிடிக்க முயன்றுள்ளனர்.

இதனால் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டு விசைப்படகுகள் சேதமடைந்தன. பல மீனவர்கள் படுகாயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆழ்கடல் பகுதியில் மீனவர்களுக்கிடையே பதட்டமான சூழல் நிலவியதால் குளச்சல், முட்டம் துறைமுகங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான விசைப்படகு மீனவர்கள் மீன்பிடி தொழிலை கைவிட்டு அவசரமாக கரை திரும்பி வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து குளச்சல் கடல் காவல் நிலைய போலீசாரும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com