ஒகி புயலால் குமரி மாவட்டத்தில் இருந்து மீன் பிடிக்க சென்ற 623 மீனவர்கள் இதுவரை திரும்பவில்லை என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
ஒகி புயலின் போது கன்னியாகுமரியில் இருந்து மீன்பிடிக்க சென்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்களை காணவில்லை. அவர்களை தேடும் பணி கடந்த ஒருவாரமாக நடைபெற்று வந்தாலும் மீனவர்களை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே காணாமல் போன மீனவர்களை மீட்கக் கோரி, கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு அரசு சார்பில் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குமரி மாவட்டத்தில் இருந்து மீன் பிடிக்க சென்ற 623 மீனவர்கள் இதுவரை கரை திரும்பவில்லை என்று மாவட்ட ஆட்சியர் சஜன்சிங் சவான் தெரிவித்துள்ளார். தற்போதைய நிலவரப்படி 13 பைபர் படகில் சென்ற 35 பேரையும், 54 விசைப்படகில் சென்ற 588 மீனவர்களையும் காணவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் காணமல் போன மீனவர்களை தேடும் பணியில் விமானப்படை, கப்பல்படை தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.