சர்வதேச சுற்றுலா மையமான கன்னியாகுமரியில் கடல் நடுவே அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு இரவு முழுவதும் மின் விளக்குகள் ஒளிரவிட வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உலக புகழ் பெற்ற சர்வதேச சுற்றுலா தலமாக திகழ்கிறது கன்னியாகுமரி. இங்குள்ள முக்கடல் சங்கமத்தையும் இயற்கை அழகையும் கண்டு ரசிக்க தினமும் ஏராளமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். அவர்கள் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் 133 அடி உயரம் கொண்ட திருவள்ளுவர் சிலை போன்றவற்றை கண்டு ரசித்து வருகின்றனர். சபரிமலை சீசன் மற்றும் கோடை விடுமுறை காலங்களில் இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிக அளவில் இருக்கும்.
இந்நிலையில் திருவள்ளுவர் சிலையை பார்வையிட பெரும்பாலான நேரங்களில் கடல் நீர்மட்டம் உள்ளிட்ட காரணங்களைகாட்டி , படகுகள் இயக்கப்படுவதில்லை என குற்றச்சாட்டு உள்ளது.
இதனைபோக்க திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் பாறை ஆகியவற்றை இணைக்க பாலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்ததன் அடிப்படையில், சுமார் 3 ஆண்டுகளுக்கு முன்னர் 15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் பாலம் அமைக்கும் பணிகள் இன்றுவரை துவங்கவில்லை. இதனால் கன்னியாகுமரி வரும் சுற்றுலா பயணிகள் திருவள்ளுவர் சிலையை காணமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது
இதனிடையே திருவள்ளுவர் சிலை மீது மின்விளக்கு ஒளிரவிடப்படுவது வழக்கம். மாலை 6 மணி முதல் இரவு 9.30 மணி வரை இந்த மின்விளக்கு போடப்படும். தற்போது சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்க ஏதுவாக இரவு முழுவதும் மின் விளக்குகளை ஒளிர விட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.