கனியாமூர் கலவரம் ஏற்பட்ட பள்ளியில் செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர் மற்றும் புகைப்படக் கலைஞர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் மாணவி உயிரிழந்த விவகாரத்தில் ஏற்பட்ட கலவரத்தால் பள்ளி சூறையாடப்பட்டது. இதையடுத்து பள்ளியை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்திருந்த நிலையில், அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இது குறித்து செய்தி சேகரிக்க பிரகாஷ் (தலைமை செய்தியாளர் நக்கீரன்) மற்றும் புகைப்படக் கலைஞர் அஜீத்குமார் ஆகிய இருவரும் காரில் சென்றுள்ளனர் அப்போது அவரை வழிமறித்த பள்ளியின் தாளாளர் ரவிக்குமாரின் தம்பி அருள் சுபாஷ் மற்றும் அவருடன் வந்திருந்த பத்துக்கும் மேற்பட்டோர் காரை வழிமறித்து தாக்கியுள்ளனர்.
இதையடுத்து அவர்கள் இருவரும் அங்கிருந்து சேலம் நோக்கி காரை வேகமாக இயக்கியுள்ளனர். அப்போது காரை, இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்தவர்கள் தலைவாசல் அருகே மீண்டும் தாக்குதல் நடத்தினர். இதை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் இருவரையும் மீட்டு தலைவாசல் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.
இதைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் புகைப்படக் கலைஞர் அஜீத்குமாரின் பல் உடைந்துள்ளது. இது குறித்து ஆத்தூர் டிஎஸ்பி ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.