சாத்தான்குளம் காவல் ஆய்வாளரை கைது செய்யாமல் விட்டது ஏன் என தூத்துக்குடி எம்.பி கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல்நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட தந்தை, மகனான ஜெயராஜ், பென்னிக்ஸ் உயிரிழந்த விவகாரத்தை கொலை வழக்காக சிபிசிஐடி போலீசார் பதிவு செய்துள்ளனர். சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக மொத்தம் 4 பேர் மீது சிபிசிஐடி போலீசார் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். எஸ்.ஐக்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் மற்றும் இரண்டு காவலர்கள் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளராக இருந்த ஸ்ரீதர் மீது இன்னும் வழக்கு பதியப்படவில்லை.
இந்நிலையில், சாத்தான்குளம் காவல் ஆய்வாளரை கைது செய்யாமல் விட்டது ஏன் என தூத்துக்குடி எம்.பி கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் “ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் கொல்லப்பட்ட சம்பவத்தில் சிபிசிஐடி கொலை வழக்குப் பதிவு செய்திருப்பதும், எஸ்.ஐ.ரகு கணேஷ் கைது செய்யப்பட்டிருப்பதும் காலம் கடந்த நடவடிக்கை என்றாலும் வரவேற்கிறேன். ஆனால், சாத்தான்குளம் ஆய்வாளர் ஸ்ரீதரை கைது செய்யாமல் விட்டது ஏன்? ”என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், “இதோடு நின்றுவிடாமல், இருவரது கொலைக்கும் உடந்தையாக இருந்த காவல் துறையினர், மருத்துவர், மாஜிஸ்திரேட் உட்பட சம்பந்தப்பட்ட அனைவரும் கைது செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். நீதி கிடைக்கும் வரை நம் குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.