தூத்துக்குடி மக்களவை தேர்தலில் தன் வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை நிராகரிக்க கோரி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கனிமொழி தாக்கல் செய்த வேட்புமனு படிவத்தில், அவரது கணவர் அரவிந்தனின் வருமானம் பற்றி குறிப்பிடவில்லை என்றும், முழுமையான விவரங்கள் இல்லாத வேட்புமனுவை ஏற்றுக் கொண்டது சட்டவிரோதமானது என்பதால், வெற்றியை செல்லாது என்று அறிவிக்க வேண்டுமென சந்தானகுமார் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியன், மனு தொடர்பாக எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய இரு தரப்பினருக்கும் உத்தரவிட்டிருந்தார். சந்தானகுமார் தரப்பில் எழுத்துப்பூர்வ வாதங்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரி கனிமொழி தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கனிமொழி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஆதாரங்கள் இல்லை என்றாலும் கூட, அதனை தேர்தல் வழக்கு விசாரணையின் போதுதான் முடிவு செய்ய முடியும் என்று குறிப்பிட்ட நீதிபதி, கனிமொழியின் மனு தள்ளுபடி செய்யப்படுவதாக தெரிவித்தார்.