திருச்செந்தூரில் கந்த சஷ்டியை முன்னிட்டு சூரசம்ஹாரம் இன்று நடைபெறவுள்ளது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.
முருகனின் அறுபடை வீடுகளுள் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 20-ம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. இதனையடுத்து தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் இலங்கை, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் இருந்தும் திருச்செந்தூர் வந்த பக்தர்கள் கடலில் புனித நீராடி சஷ்டி விரதம் துவக்கினர்.
இந்நிலையில் கந்த சஷ்டியின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று மாலை நடைபெறவுள்ளது. கடற்கரையில் நடைபெறும், சூரபத்மனை முருகன் வதம் செய்யும் புராண நிகழ்வுக்காக சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சூரசம்ஹாரத்தைக் காண லட்சக்கணக்கான மக்கள் கடற்கரையில் திரள்வார்கள் என்பதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கோயிலுக்கு வரும் அனைவரும் பலத்த சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்பட உள்ளனர். விழாவை முன்னிட்டு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அசம்பாவிதங்களை தவிர்க்க ஆங்காங்கே கண்காணிப்புப் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.