காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வந்த செயின்ட் ஜோசப் காப்பகத்திலிருந்து பொதுமக்களால் மீட்கப்பட்ட முதியவர் மிகவும் மோசமான நிலையில் உள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் அடுத்த பாலேஸ்வரத்தில் இயங்கி வந்த செயிண்ட் ஜோசப் காப்பகம், சடலங்கள் புதைக்கப்பட்டதால் சர்ச்சைக்குள்ளானது. அத்துடன் உயிரிழந்தவர்களின் எலும்புகள் விற்கப்படுவதாகவும், முறைகேடாக சடலங்களை அடக்கம் செய்வதாகவும் அந்த காப்பகம் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டது. இதற்கிடையே அந்தக் காப்பக வாகனத்தில் கடந்த 20ம் தேதி ஒரு சடலத்துடன் இரண்டு முதியவர்கள் கொண்டு செல்லப்பட்டனர். அந்த வாகனத்தை வழிமறித்த பொதுமக்கள், சாலவாக்கம் போலீசில் ஒப்படைத்தனர்.
அதில், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த அன்னம்மாள் என்பவரை அவரது உறவினர்கள் அழைத்து சென்று விட்டனர். திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த செல்வராஜ் என்பவரை சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஒரு நாள் சிகிச்சை பெற்ற செல்வராஜ், மறு நாள் வெளியேற்றப்பட்டதாக தெரிகிறது. அவருக்கு யாரும் இல்லாததால், மேல் சட்டை மட்டும் அணிந்த நிலையில், அழுக்காக, துர்நாற்றம் வீசும் நிலையில், செங்கல்பட்டு அரசு மருத்துவமனை பகுதியில் சாலையோரத்தில் மயங்கி யாரும் கண்டுகொள்ளாமல் இறக்கும் தருவாயில் உள்ளார்.