காஞ்சிபுரத்தில் குப்பை வண்டியில், சமூக இடைவெளி இல்லாமல் தூய்மைப் பணியாளர்களை ஏற்றிச்செல்லும் அவலநிலை உள்ளது.
காஞ்சிபுரத்தில் சுமார் 60 தூய்மைப் பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்கின்றனர். தற்போது கொரோனா நோய்த்தொற்று பரவல் உள்ளநிலையில் நகரைச் சுற்றி பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் அவர்களுக்கு போதுமான போக்குவரத்து வசதி செய்து தரப்படவில்லை. அதனால் நகராட்சிக்கு குப்பை அள்ளும் சிறிய லோடு ஆட்டோவில் அவர்கள் அதிகாலையில் அழைத்து வரப்படுகிறார்கள். அதுபோல் மாலையில் கொண்டு விடப்படுகிறார்கள். இந்த பயணத்தின்போது போதிய சமூக இடைவெளியை பின்பற்ற முடிவதில்லை என்று பீதியுடன் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது கொரோனா வைரஸ் நோய் பரவி வரும் சூழ்நிலையில் தங்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்பதே அவர்களின் வேண்டுகோளாக உள்ளது. மேலும் கொரோனா தடுப்பூசி பெரும்பாலான தூய்மை பணியாளர்களுக்கு போடவில்லை. ஒரு சில தூய்மை பணியாளர்களுக்கு முதல் டோஸ் மட்டுமே போடப்பட்டுள்ளது. இரண்டாவது கொரோனா தடுப்பூசி இன்னும் போடவில்லை எனக் கூறுகிறார்கள் . தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் இதே நிலைமைதான் என்று கூறுகின்றனர். அரசு துப்புரவு பணியாளர்களை தூய்மைப் பணியாளர்கள் என பெயர் மாற்றம் செய்தால் போதாது; அவர்களுக்கு வழங்கவேண்டிய பாதுகாப்பு உபகரணங்களையும் வழங்கவேண்டும் என பலரும் கோரிக்கை வைத்துள்ளனர்
தூய்மைப் பணியாளர்களின் உழைப்பை அவமதிக்கும் விதத்தில், அவர்களைக் குப்பை வண்டியில் அமர வைத்து அழைத்துச் செல்வதை தவிர்த்து அவர்களை உரிய வாகனத்தில் பாதுகாப்பாக அழைத்துச் செல்ல வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது