காஞ்சிபுரம் மாவட்டத்தில் 25க்கும் மேற்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்களே இல்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 31 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. இந்த சுகாதார நிலையங்கள் ஒவ்வொன்றிலும் ஒரு மருத்துவர் 2 செவிலியர் சிகிச்சை அளிப்பதற்காக பணியமர்த்தப்பட்டுள்ளனர். ஆனால், 25க்கும் மேற்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள் இல்லாமல் செவிலியர்களே சிகிச்சை அளிக்கும் நிலைமை உள்ளதாக கிராம மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து கூறும் காஞ்சிபுரம் மக்கள், ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியில் இருக்க வேண்டிய, ஒரு தாய் - சேய் நல அலுவலர், ஒரு சுகாதார விளக்க அலுவலர், ஐந்து உதவி பணியாளர், ஒன்பது ஆயா பணியிடங்கள் அனைத்துமே காலியாக உள்ளதாகவும், அதிகபட்சமாக 90 சுகாதார ஆய்வாளர் பணியிடங்களில், 44 இடங்கள் காலியாக உள்ளதாகவும் குறை கூறுகின்றனர். தற்போது டெங்கு பரவல் உள்ள நிலையில் காய்ச்சலுக்கான மருத்துவ முகாம் கூட நடத்தப்படவில்லை என்றும் கிராம மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.