பாலேஸ்வரம் கருணை இல்லத்தில் இருந்து அழைத்து போலீஸார் சென்ற 294 முதியவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தக்கோரி உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் பாலேஸ்வரத்தில் உள்ள புனித ஜோசப் கருணை இல்லத்தில் முதியோர்கள் மர்மமான முறையில் இறப்பதாகவும், அவர்களது எலும்புகள் விற்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து கருணை இல்லத்தில் விசாரணை நடத்திய அதிகாரிகள் அங்கிருந்த 294 முதியவர்களை அரசுக் காப்பகங்களுக்கு மாற்றி நடவடிக்கை மேற்கொண்டனர். இதனையடுத்து முறையான அனுமதியின்றி கருணை இல்லம் செயல்படுவதால் காப்பகத்தை ஏன் மூட உத்தரவிடக்கூடாது என மாவட்ட வருவாய் கோட்டாசியர் நோட்டீஸ் அனுப்பினார்.
வருவாய் கோட்டாசியரின் நோட்டீஸை ரத்து செய்யக்கோரி கருணை இல்ல நிர்வாக இயக்குனர் தாமஸ் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி ரமேஷ், அரசு விளக்கம் அளிக்க உத்தரவிட்டார். ஆனால் அரசு அவகாசம் கேட்டதால், இரண்டு வார கால அவகாசம் வழங்கி வழக்கை ஒத்திவைத்தார். அதுவரை பாலேஸ்வரம் இல்லம் மீதான அரசின் நடவடிக்கைகளுக்கு இடைக்காலத் தடை விதித்தும் உத்தரவிட்டார்.
இந்நிலையில் கருணை இல்லத்தில் இருந்து காவல் துறையால் அழைத்து செல்லப்பட்ட 294 முதியவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டும் என ஜோசப் தாமஸ் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், மதச்சார்பின்மை தன்மையுடனும், அரசின் அனுமதியுடனும் நடத்திவரும் இல்லத்தின் மீது கருணாகரன் என்பவர் கொண்ட காழ்ப்புணர்ச்சியால், தங்கள் இல்லம் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கூறியுள்ளார். அத்துடன் இல்லத்திலிருந்து காவல்துறை அழைத்து சென்ற தினத்தன்றே ஒரு முதியவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். எனவே 294 முதியவர்களை ஆஜர் படுத்தக் கோரியுள்ளார். மனுவை விசாரித்த நீதிமன்றம் தமிழக டிஜிபி, காஞ்சிபுரம் எஸ்.பி மற்றும் சாலவாக்கம் ஆய்வாளர் விளக்கமளிக்க உத்தரவிட்டு, வழக்கை மார்ச் 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.