வரும் ஞாயிற்றுக்கிழமை காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுமார் 500 தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. இதில் அறுபதாயிரம் தடுப்பு ஊசி பொதுமக்களுக்கு செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வருகின்ற 12.09.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று கொரோனா தடுப்பூசி முகாம் அனைத்து வட்டாரத்திலும் நடைபெறவுள்ளது. ஒவ்வொரு வட்டாரத்திலும் 100 தடுப்பூசி முகாம்கள் நடத்த மாவட்ட ஆட்சித்தலைவரின் அறிவுறுத்தலின்படி திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கொரோனா தடுப்பூசியானது 100% பாதுகாப்பானது. ஆகவே முதல் தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் 2வது தடுப்பூசி நிலுவையில் இருந்தால் அவர்களும் இந்த முகாமில் இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.
முதல் தவணையினை போடாதவர்கள் அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்திகொண்டு தங்களும் தங்கள் குடும்பத்திலுள்ள 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் குடும்பமாக வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். கொரோனாவை தடுப்பதற்கு நம் கையில் உள்ள ஆயுதம் தடுப்பூசியே ஆகும். குறிப்பாக இரத்த அழுத்தம், சர்க்கரைநோய் உள்ளவர்களும் தடுப்பூசியினை போட்டுக்கொள்ள வேண்டும் என்பது அவசியமானது.
இந்த மாபெரும் தடுப்பூசி முகாமில் சுமார் 60,000 தடுப்பூசி போட காஞ்சிபுரம் மாவட்டத்தில் திட்டமிடப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசியே இதுவரை 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் போடாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த சிறப்பு முகாமினை பயன்படுத்தி தடுப்பூசி போட்டுக்கொள்ள மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.