காஞ்சிபுரம் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாத்திரை கிடைக்காமல் சர்க்கரை நோயாளிகள் தவித்து வருகிறார்கள்.
செவிலிமேடு அருகே உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சர்க்கரை நோயாளிகள் மாதந்தோறும் மாத்திரை வாங்கிச் செல்கின்றனர். அதேபோல் வழக்கமாக இந்த மாதமும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாத்திரை வாங்குவதற்காக இன்று வந்த சர்க்கரை நோயாளிகளுக்கு மாத்திரை இல்லை என்று மருத்துவமனை நிர்வாக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் நோயாளிகள் மருத்துவமனை செவிலியர்களிடம் வாக்குவாதம் செய்துள்ளனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய மருத்துவமனை ஊழியர்கள் 30 மாத்திரைகள் தருவதற்கு பதிலாக 10 மாத்திரைகள் மட்டும் தந்து அனுப்பிவைத்தனர். மாதம் ஒரு லட்சம் மாத்திரைகள் வரவேண்டிய இடத்தில் தற்போது வெறும் பத்தாயிரம் மாத்திரைகள் மட்டுமே வருவதால் முறையாக மாத்திரை வழங்க முடியவில்லை எனத்தெரிவித்த ஊழியர்கள், இன்னும் சில நாட்களில் தட்டுப்பாடு சரியாகிவிடும் என்று தெரிவித்தனர்.