ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் 350 பேரிடம் இடமிருந்து மாத சம்பளத்தில் ஆயிரம் ரூபாய் கையூட்டு பெறும் மேற்பார்வையாளர்கள் குறித்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
காஞ்சிபுரம் பெரு நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளை தூய்மை செய்வதற்கு ஒப்பந்தப் பணியாளர்களாக சுமார் 350 பேரும், நிரந்தரப் பணியாளர்கள் சுமார் 170 பேரும் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், காஞ்சி பெருநகரப் பகுதியில் ஒப்பந்த அடிப்படையில் பணி புரிந்து வரும் 350 பணியாளர்களுக்கான மாத ஊதியம் மாதத்தின் முதல் 5 தேதிக்குள் முறையாக வழங்கப்படாமல், மாதத்தின் 25 தேதிக்கு மேல் வழங்கப்பட்டு வருகிறது. ஒரு சில சமயங்களில்,மாத ஊதியம் வழங்கபடாமலும் இருப்பது வாடிக்கையான ஒன்றாக உள்ளது என்கின்றனர் ஊழியர்கள்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், “சரியான நேரத்தில முறையாக மாத ஊதியத்தை வழங்காத காரணத்தினால் வீட்டு வாடகை, குழந்தைகளின் படிப்புச் செலவு, மருத்துவச் செலவு மற்றும் முதியவர்கள் பராமரிப்புச் செலவு என குடும்பத்தை நடத்துவது மிகப்பெரிய அளவில் சிக்கலை ஏற்படுத்துகிறது. வாழ்வாதாரம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றது.
மாத ஊதியத்தை சரியான நேரத்திலும், முறையாக வழங்குவது தொடர்பாக மேற்பார்வையாளரிடம் கோரிக்கை வைத்தால், ஒரு சில மேற்பார்வையாளர்கள் கடினமான வார்த்தைகளை பயன்படுத்தி வசைபாடுவதும், விருப்பமிருந்தால் பணியாற்றுங்கள் இல்லாவிட்டால் பணியிலிருந்து விலகிச் செல்லுங்கள் என்றும் கூறுகின்றனர்.
தூய்மைப் பணியாளர்களுக்கு தேவைப்படும் முக்கியத் தடவாளப் பொருட்களான மலார் (ரூபாய் 300) மற்றும் கூடை (ரூபாய் 200) போன்ற பொருட்களை நீண்ட வருடங்களாக நகராட்சியில் இருந்து வழங்காமல் இருப்பதால், எங்களுடைய ஊதியத்தில் இருந்து வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது. இதனால் நாங்கள் சுத்தம் செய்யும்போது கிடைக்கக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள், பாட்டில், இரும்பு போன்ற பொருட்களை விற்று அதில் வரக்கூடிய வருமானத்தில் கூடை, மலார் போன்ற பொருட்களை வாங்குகிறோம்.
அதேபோல் நிரந்தரப் பணியாளர்கள் காலை 6 மணி முதல் 9 மணி வரையும், மதியம் 2:30 முதல் மாலை 5.30 மணிவரை மட்டுமே பணி புரிகிறார்கள். ஆனால், ஒப்பந்தப் பணியாளர்கள் அனைவரும் காலை 6 மணி முதல் 12 மணி வரையிலும், மதியம் 2:30 முதல் மாலை 7 மணி வரையிலும் பணிபுரிய வேண்டிய சூழல் உருவாகி வேலைப்பளு அதிகரித்து வருகிறது” என்கின்றனர்.
மாதம் தோறும் ஒப்பந்தப் பணியாளர்கள் 350 பேரும் தாங்கள் பெறக்கூடிய மாத ஊதியத்தில் இருந்து சுமார் 1,500 முதல் 2,000 ரூபாய் வரை, தாங்கள் தொடர்ச்சியாக ஒப்பந்தப் பணியாளராக தொடர்ந்து பணியாற்ற தங்களுடைய மேற்பார்வையாளர்கள் வசம், தவறாமல் ஒப்படைக்க வேண்டிய நடைமுறையை நீண்ட வருடங்களாக பின்பற்றி வருவதால் மூன்று வருடங்களுக்கு சுமார் ஒரு கோடியே 26 லட்சம் ரூபாய் வரை வழங்கியுள்ளதாக தெரியவருகிறது.
எனவே “இது தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்டு இம்மாதிரியான நடைமுறைகளை உடனடியாக தடுத்து நிறுத்துவதோடு, ஒப்பந்தப் பணியாளர்களின் மாத ஊதியத்தை பிரதி மாதம் 5 தேதிக்குள் வழங்கிட வேண்டும். ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களின் பிரச்னைகள் மற்றும் குறைகளை போக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு குழு அமைக்க வேண்டும். ஒப்பந்த தூய்மை பணியாளர்களை தமிழக அரசு உடனடியாக நிரந்தரம் செய்ய வேண்டும். அல்லது நிரந்தர பணியாளர்களுக்கு இணையாக சம்பளம் வழங்க தேவையான உறுதியான நடவடிக்கைகளை எடுத்து ஒப்பந்தப் பணியாளர்களின் குடும்ப வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்திட வேண்டும்” எனக்கூறி காந்திய மக்கள் இயக்க மாவட்ட வழக்கறிஞர் அணி, பொது மக்களின் சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
- எஸ்.பிரசன்னா வெங்கடேஷ்