உத்திரமேரூர் அருகே 1200 ஆண்டுகளுக்கு முந்தைய பல்லவர் கால சிலைகள் கண்டிறியப்பட்டுள்ளன.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அருகே உள்ளது அரசாணி மங்கலம் கிராமம். இந்த கிராம வயல்வெளியில் 1200 ஆண்டுகளுக்கு முற்பட்ட 9ஆம் நூற்றாண்டை சேர்ந்த மூத்ததேவி எனப்படும் ஜேஷ்டா தேவி சிலை மற்றும் அய்யனார் சிலையை உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மையத்தினர் கண்டறிந்துள்ளனர்.
இது குறித்து உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மையத் தலைவர் கொற்றவைஆதன் கூறுகையில், “அரசாணி மங்கலம் கிராமத்தைச் செர்ந்த முருகன் என்பவர் அளித்த தகவலின் பேரில் அக்கிராமத்தை கள ஆய்வு செய்தபோது காளியம்மன் கோயில் அருகிலுள்ள வயல்வெளி பகுதிகளில் பல்லவர்களின் இறுதி காலத்தைசு; செர்ந்த இரண்டு சிலைகளை கண்டறிந்தோம்.
இதில், மூத்ததேவி எனப்படும் ஜேஷ்டாதேவி சிலை, அக்கிராம கோட்டைமேடு வயல்வெளி பகுதியில் கண்டறியப்பட்டது. இது 2.5 அடி உயரத்தில் 2 அடி அகலத்தில் அமர்ந்த நிலையில் அடிப்பாகம் மண்ணில் புதைந்து காணப்படுகிறது.
பல்லவர் காலத்தில் வழிபாட்டின் உச்சத்தில் இருந்த இந்த தாய் தெய்வம் நந்திவர்ம பல்லவனின் குலதெய்வமாக இருந்துள்ளது. பிற்கால சோழர் காலத்திலும் வழிபாட்டில் தொடர்ந்த இந்த தெய்வம், நாளடைவில் மூத்ததேவி என்பது மருவி மூதேவி ஆக வழக்கில் வந்து வழிபாடு இல்லாமல் போயுள்ளது.
இது பல்லவர்களின் இறுதி காலத்தை சார்ந்ததாகும். கடந்தகால வரலாற்றை நிகழ்கால சமுதாயத்திற்கு அடையாளமாக பறைசாற்றி கொண்டிருக்கும் இந்த அரிய கலை பொக்கிஷங்களை காப்பது நம் கடமையாகும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்