தமிழ் சமஸ்கிருத அகராதி நூல் வெளியீட்டு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது காஞ்சி இளைய மடாதிபதி விஜயேந்தரர் எழுந்து நிற்காதது சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜாவின் தந்தை மறைந்த பேராசிரியர் ஹரிஹரன் எழுதிய தமிழ்-சமஸ்கிருதம் அகராதி வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. விழாவில் சிறப்பு அழைப்பாளராக ஆளுநர் பன்வாரிலால் கலந்து கொண்டு நூலை வெளியிட்டார்.
இந்த நிலையில், நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது மடாதிபதி விஜயேந்தரர் எழுந்து நிற்காதது சர்ச்சையை உருவாக்கியுள்ளது. ஆளுநர் உள்ளிட்ட விழாவில் கலந்துகொண்ட அனைவரும் எழுந்து நின்று தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மரியாதை செய்த நிலையில், விஜயேந்திரர் மட்டும் எழுந்து நிற்கவில்லை. ஆனால், தேசிய கீதம் இசைக்கும் போதும் மட்டும் விஜயேந்திரர் எழுந்து நின்று மரியாதை செய்தார்.
இதனால், தேசிய கீதத்துக்கு மரியாதையும், தமிழ்த்தாய் வாழ்த்துக்கு அவமரியாதையும் செய்ததாக விஜயேந்திரர் மீது சர்ச்சை எழுந்துள்ளது. இந்த நிகழ்வு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.