திடீரென மூச்சுத் திணறல்; பேச்சை புரிந்துகொள்ளாத 108 சேவை ஊழியர்; கல்லூரி மாணவர் உயிரிழப்பு

திடீரென மூச்சுத் திணறல்; பேச்சை புரிந்துகொள்ளாத 108 சேவை ஊழியர்; கல்லூரி மாணவர் உயிரிழப்பு
திடீரென மூச்சுத் திணறல்; பேச்சை புரிந்துகொள்ளாத 108 சேவை ஊழியர்; கல்லூரி மாணவர் உயிரிழப்பு
Published on

காஞ்சிபுரத்தில் மூச்சுத் திணறலால் தவித்த கல்லூரி மாணவர், 108 ஆம்புலன்ஸ் சேவையை நாடியபோது உரிய நேரத்தில் உதவி கிடைக்காமல் உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது.

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் கணேஷ் குமார். இவர் கடந்த ஞாயிறன்று பச்சையப்பன் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் தனியே இருந்துள்ளார். அப்போது அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஆம்புலன்ஸ் அனுப்புமாறு கேட்டு, 108 சேவைக்கு கணேஷ்குமார் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். ஆனால் அதுகுறித்து ஊழியருக்கு புரியாமல் போயுள்ளது. இதனிடையே, கணேஷ்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். அவர் ஆம்புலன்ஸ் சேவை கேட்டு செல்போனில் பேசியது, தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

6 மாதங்களுக்கு முன்பு இதேபோல கணேஷ்குமார் தனியாக இருந்தபோது, மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. அந்த நேரத்தில் 108 ஆம்புலன்ஸை வரவழைத்து மருத்துவமனையில் கணேஷ் குமார் சேர்ந்ததாக அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர். ஆனால்‌, தற்போது அவரது உயிரைக் காக்க ஆம்புலன்ஸ் வரவில்லை என்று கண்ணீருடன் கூறுகின்றனர், அவர்கள்.

மகளிருக்கான அவசர உதவிக்காக காவல்துறை அமல்படுத்தியுள்ள 'காவலன்' செயலியில், உதவி கோருவோரின் இருப்பிடத்தை அறிந்து கொள்ளும் வசதி உள்ளது. அதேபோல, 108 சேவைக்கு அழைப்போரின் இருப்பிடத்தையும் அறிந்து கொள்ளும் வசதியை ஏற்படுத்தினால் பல உயிர்கள் காப்பாற்றப்படும் என்று கணேஷ்குமாரின் குடும்பத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர். இந்த விவகாரம் குறித்து தமிழ்நாடு 108 ஆம்புலன்ஸ் சேவையின் தலைமை மேலாளர் செல்வாவிடம் கேட்டபோது, இவ்விஷயம் தற்போதுதான் தனது கவனத்துக்கு வந்திருப்பதாகவும், உடனே உரிய விசாரணை நடத்தப்படும் என்றும் உறுதியளித்தார்.

இதுபோன்ற நிலை மீண்டும் ஏற்படாமல் தவிர்க்க, உதவி கோருவோரின் இருப்பிடத்தை அறியும் அதிநவீன வசதியை கொண்டு வர வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com