திரைப்பட சண்டை பயிற்சியாளரும், இந்து முன்னணி அமைப்பின் கலை இலக்கிய பிரிவு மாநில செயலாளருமான கனல் கண்ணன் கடந்த ஜூன் மாதம் 18 ஆம் தேதி அவரது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவேற்றம் செய்திருந்தார். அதில் கிறிஸ்தவ மத போதகர் அணியும் உடையுடன் இருக்கும் வெளிநாட்டைச் சேர்ந்த நபரொருவர், இளம் பெண்ணுடன் நடனமாடும் வீடியோ இருந்தது. வீடியோவின் பின்னணியில் தமிழ் திரைப்பட பாடலும் இணைக்கப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. அந்த வீடியோவுக்கு ‘வெளிநாட்டு மத கலாச்சாரத்தின் உண்மை நிலை இதுதான். மதம் மாறிய இந்துக்களே சிந்தியுங்கள்’ என்று குறிப்பிட்டிருந்தார் கனல் கண்ணன்.
இதனை பார்த்த கன்னியாகுமரி மாவட்டம் திட்டுவிளை திமுக ஐ.டி பிரிவைச் சேர்ந்த ஆஸ்டின் பெனட் (54) என்பவர் நாகர்கோவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் செயல்படும் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்று அளித்தார். அதில், கிறிஸ்தவ மதத்தை இழிவுபடுத்தும் விதத்தில் கனல் கண்ணன் அவதூறாக வீடியோ வெளியிட்டுள்ளதாக குறிப்பிட்டு புகார் அளித்திருந்தார்.
அதன் அடிப்படையில் கனல் கண்ணன் மீது சைபர் கிரைம் போலீசார், 295 (மத ரீதியாகவும் சாதி ரீதியாகவும் வார்த்தைகளை உபயோகப்படுத்துவது), 505/2 (பிரிவினையை ஏற்படுத்துவது) ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதையடுத்து நேரில் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு கனல் கண்ணனுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி நேற்று காலை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் ஆஜரானார் கனல் கண்ணன். இதனிடையே மதியம் 2 மணி வரை விசாரணை மேற்கொள்ளாமல், உள்நோக்கத்தோடு அவரை வெளியே விடவில்லை என இந்து முன்னணியினர் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீசார் கனல் கண்ணனை வெளியே அனுப்பினர்.
இதைத் தொடர்ந்து அவர் உணவருந்திவிட்டு வருவதாக வெளியே வந்தபோது போலீசார் அவரை வலுக்கட்டாயமாக காவல் நிலையத்திற்குள் அழைத்துச் சென்றனர். இதனால் இந்து முன்னணியினருக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து அவரிடம் தொடர்ந்து 8 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடைபெற்றது. அதன்பின் சைபர் கிரைம் போலீசார் அவரை கைது செய்தனர். இந்நிலையில், இந்து முன்னணி உட்பட இந்து இயக்கங்களைச் சேர்ந்தவர்களும், பா.ஜ.க-வினரும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கூடியதால் பரபரப்பும் ஏற்பட்டது.