ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் பட்டப்பகலில் 300 சவரன் நகை வழிப்பறி செய்யப்பட்டதாக வெளியான தகவலில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
ராமநாதபுரம் கமுதியைச் சேர்ந்த குருமூர்த்தி என்பவரின் மனைவி உமா. இவரது சகோதரியின் கணவர் பூபதி ராஜா. திரைப்பட பைனான்சியரான பூபதி ராஜா, தனது மனைவியின் தங்கை உமாவின் பொறுப்பில் 300 சவரன் நகைகளை கொடுத்து வைத்திருந்தார். நகைகளை கமுதியில் உள்ள ராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி லாக்கரில் வைத்திருந்தார் உமா.
இந்நிலையில், பூபதிராஜாவின் மகன் பழனிகுமாரின் திருமணம் அருப்புக்கோட்டையில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக நகைகளை பூபதி ராஜா கேட்க, அவற்றை எடுக்க வங்கிக்குச் சென்றுள்ளார் உமா. வங்கிக்கு சென்ற அவர், மேட்டுத் தெருவில் உள்ள வங்கியின் லாக்கரிலிருந்து நகைகளை எடுத்து ஒரு பையில் வைத்துக் கொண்டு வந்த போது வழிபறி செய்யப்பட்டதாக கூறியுள்ளார். தனது வீட்டை உமா நெருங்கிய போது முகமூடி அணிந்த ஒருவர் அவர் முன் ஒரு பொருளை தூக்கிப் போட்டு கவனத்தை திசை திருப்பியதாக தெரிவித்தார். ஒரு நிமிடம் திடுக்கிட்ட உமா வீசப்பட்டது என்னவென்று பார்க்க முனைந்த போது, அவரது கையில் இருந்த நகைப் பையை அந்த நபர் பறித்துக் கொண்டு ஓடியதாக கூறினார்.
கதறியபடி கமுதி காவல் நிலையத்துக்குச் சென்ற உமா வழிப்பறி குறித்து புகார் அளித்தார். உடனடியாக நிகழ்விடத்துக்கு சென்று காவல்துறையினர் விசாரணை நடத்தினர். உமாவிடம் டி.எஸ்.பி. சண்முகசுந்தரம் விசாரணை நடத்தினார். நிகழ்விடத்தின் அருகே உள்ள சிசிடிவி கேமரா காட்சிகள் மூலம் கொள்ளையர்களைப் பிடிக்கும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். கொள்ளை போனதாக சொல்லப்படும் நகைகளின் மதிப்பு சுமார் 75 லட்சம் ரூபாய். பட்டப்பகலில் ஆள்நடமாட்டம் அதிகமுள்ள இடத்தில் நடந்துள்ள வழிப்பறிக் கொள்ளை நடந்ததாக வெளியான செய்தி மக்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், 300 சவரன் நகை வழிபறி செய்யப்பட்டதாக கூறப்பட்ட விவகாரத்தில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. நகைகள் வழிபறி செய்யப்பட்டதாக உமா நாடகமாடியது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. தனது சகோதரியின் கணவர் கொடுத்த நகைகளை கொஞ்சம் கொஞ்சமாக உமா விற்றுள்ளார். தற்போது நகைகளை அவர் கேட்கவே, வழிபறி செய்யப்பட்டதாக உமா நாடகமாடியுள்ளார்.