பொன்.ராதாகிருஷ்ணன் மொழி மாறிவிட்டார் என நினைக்கிறேன் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
நாட்டின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதையடுத்து தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனங்களையும், எதிர்ப்பையும் தெரிவித்தனர். அதுமட்டுமின்றி மத்திய அரசு தமிழர்கள் மீது இந்தியை திணிக்க நினைப்பதாகவும், தமிழை அழிக்க நினைப்பதாகவும் குற்றஞ்சாட்டினர்.
இதைத்தொடர்ந்து இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், “நன்றி மறந்தவன் தமிழன். கொண்டாடத் தெரியாதவன் தமிழன். சமஸ்கிருதத்தை விட, பழமையான மொழி தமிழ் என பிரதமர் மோடி பேசியதை தமிழர்கள் கொண்டாடவில்லை” என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது இது குறித்து கருத்து தெரிவித்த மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன், பொன்.ராதாகிருஷ்ணன் மொழி மாறிவிட்டார் என நினைக்கிறேன் என்றார். மேலும் பேசிய அவர், ''தமிழர்களுக்கு கவலைதரும் விஷயங்களை பற்றி முதலில் விவாதிப்போம். பொதுத்தேர்வால் பள்ளிப்படிப்பை பாதியில் விட்டவர்கள் ஏராளம். 5 மற்றும் 8 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு வைப்பது குறித்து அரசியல் கட்சியை விட மாணவர்களிடம் கேட்டால் விளக்கம் கிடைத்துவிடும்.
மொழிப்போர் போராட்டத்திலும் பங்கெடுத்துள்ளேன். இந்தி மொழி படங்களிலும் நடித்துள்ளேன். படத்தில் நடிப்பது என் தனிப்பட்ட ஆர்வம். எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் ஏற்கத் தயார். ஆனால் இதுதான் மொழி என ஒரு மொழியை திணித்தால் ஏற்க மாட்டோம்” எனத் தெரிவித்தார்.