ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது தொடர்பாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 100 நாட்களாக தூத்துக்குடி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 100வது நாள் போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டு, 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்நிலையில் இன்று ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலைக்கு தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி, சீல் வைத்தார்.
இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள கமல்ஹாசன், “தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடும் தமிழக அரசின் முடிவு, மக்கள் வலிமையின் இன்னுமோர் பேருதாரணம். அனைத்து அரசியல் கட்சிகளும் சிரம் தாழ்த்தி ஏற்க வேண்டிய பாடம். களத்தில் பலியான தியாகிகளை போற்றுவதோடு இல்லாமல் பாடமும் கற்கவேண்டும்” என தெரிவித்துள்ளார்.