நடிகர் கமல்ஹாசன் மக்களை குழப்பக்கூடாது. - கடம்பூர் ராஜு
நடிகர் கமல்ஹாசன் கருத்து ரைமிங்காக சினிமாவில் பேச நல்லா இருக்கும். அரசியலுக்கு நன்றாக இருக்காது என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வீரவாஞ்சிநகரில் ஸ்ரீவீரவிநாயகர் திருக்கோயில் மகாகும்பிஷேக விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து பொது மக்களுக்கு இலவச வேஷ்டி, சேலை மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதன் பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களிடம் பேசுகையில்... நடிகர் கமல்ஹாசன் மக்கள் வாழ்கைக்கு பொருந்தாத கருத்துகளை ட்விட்டரில் கூறியுள்ளார். கொரோனாவை பார்த்து உலக நாடுகளே அச்சத்தில் உள்ளது. இந்த நிலையை அவர் உணர வேண்டும். தடுப்பு மருந்தினை யாரும் கண்டுபிடித்ததாக சொல்லவில்லை. அதற்கான முயற்சிகள் கடுமையாக உலகளவில் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்திய பிரதமர் மோடி மற்றும் மத்தியஅரசு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க வேண்டும் என்று தீவிரமாக இருக்கும் நிலையில் அது நிச்சயமாக வரும் என்ற நம்பிக்கையில் நாம் எதிர்கொள்ள வேண்டும். கொரோனாவால் ஒரு உயிரிழப்பு கூட ஏற்படக் கூடாது என்று முதல்வர் தெரிவித்தது மட்டுமின்றி, அதனை செய்தும் காண்பித்துள்ளார்.
கொரோனா தடுப்பு பணிக்கு வரமால் சில தலைவர்கள் காணொலி காட்சி பெட்டிக்கு முன்பு மட்டும் இருந்து கொண்டு 7 மாதங்களாக வெளியே வர பயப்படுகின்றனர். கொரோனா வந்த காலத்தில் இருந்து நடிகர் கமலஹாசனை யாராவது வெளியே பார்த்து இருக்கிறார்களா?. செய்தியாளர்களை கூட வீடியோ கான்பிரன்சில் சந்தித்து வரும் நடிகர் கமல்ஹாசன், அரசு நல்ல திட்டத்தினை அறிவிக்கும்போது அதனை வரவேற்க வேண்டும்.
தடுப்பு ஊசி இல்லை என்று தான் நாட்டுக்கும், உலகிற்கும் தெரியும். ஆனால் விரைவில் கண்டுபிடிக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது. தடுப்பு ஊசி எப்போது வந்தாலும் கொடுக்கப்படும் என்று தான் சொல்லப்பட்டுள்ளது. தவிர இன்றைக்கோ, நாளைக்கோ என்று சொல்லவில்லை. இந்த நேரத்தில் நடிகர் கமல்ஹாசன் மக்களை குழப்பக்கூடாது. வரவேற்க வேண்டும், நடிகர் கமல்ஹாசன் கருத்து ரைமிங்கா சினிமாவில் பேச நல்ல இருக்கும். அரசியலுக்கு நன்றாக இருக்காது என்றார்.