நெல்லை: 22 ஆண்டுகளுக்குப்பின் சமூக வலைதளம் மூலம் ஒன்றுசேர்ந்த கல்லணை பள்ளி மாணவிகள்!

நெல்லை: 22 ஆண்டுகளுக்குப்பின் சமூக வலைதளம் மூலம் ஒன்றுசேர்ந்த கல்லணை பள்ளி மாணவிகள்!
நெல்லை: 22 ஆண்டுகளுக்குப்பின் சமூக வலைதளம் மூலம் ஒன்றுசேர்ந்த கல்லணை பள்ளி மாணவிகள்!
Published on

22 ஆண்டுகளுக்கு பிறகு சமூக வலைதளங்கள் மூலமாக ஒன்று சேர்ந்த மாநகராட்சி கல்லணை பள்ளி மாணவிகள் பழைய நினைவுகளை பகிர்ந்துகொண்டு ஆட்டம் பாட்டம், கொண்டாட்டம் என ம்கிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 

திருநெல்வேலி டவுனில் உள்ளது கல்லணை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி. இந்த பள்ளியில் 1999 ஆம் ஆண்டு மேல்நிலை வகுப்பு முடித்த மாணவிகள் ஒன்று சேர்ந்து உற்சாகமாக கொண்டாடினார். சமூக வலைதளங்கள் மூலமாக தகவல்கள் பரிமாறப்பட்டு சுமார் 100க்கும் மேற்பட்ட மாணவிகள் ஒன்று சேர்ந்து நிகழ்ச்சியை நடத்தினர். அப்போது அவர்கள் தங்களுக்கு பாடம் நடத்திய ஆசிரியர்களை கௌரவிக்கும் விதமாக அவர்களுக்கு நினைவுப் பரிசும், பள்ளிக்கு மரக்கன்றுகளும் வழங்கினர். மேலும் ஆசிரியர்களுடன் சேர்ந்து கேக் வெட்டி சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பழைய கால நினைவுகளை நினைவுகூறும் வகையில் பள்ளி வாசலில் விற்பனைக்கு வைத்திருப்பது போன்று மாங்காய், நெல்லிக்காய்களை விற்பனைக்கு வைத்திருந்தனர். விழாவிற்கு வந்திருந்த அனைவரும் அதனை வாங்கி சுவைத்தனர். நிகழ்ச்சியில் மாணவிகள் தங்களின் குழந்தைகளுடன் வந்து ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என உற்சாகப்படுத்தினர். தாங்கள் அனைவரும் 1999ஆம் ஆண்டு இந்த பள்ளியை விட்டு வெளியேறியதாகவும், ஆறாம் வகுப்பு முதல் இந்த பள்ளியில் படித்ததாகவும் தங்களது பழைய நினைவுகளை பகிர்ந்துகொண்டனர்.

இன்று நடைபெற்ற இந்த நிகழ்வு தங்களை பழைய காலத்திற்கு அழைத்துச் செல்வதாகவும், தங்கள் குழந்தைகள் வளர்ந்த நிலையிலும் தாங்கள் இன்னும் அந்த பள்ளியில் மாணவியைபோலவே உணர்வதாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். மேலும் குடும்ப சூழ்நிலை மற்றும் பிற காரணங்களால் வெவ்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் சமூக வலைதளங்கள் மூலமாக ஒருங்கிணைந்து ஒன்றுகூடியதாகவும், பழைய நண்பர்களை சந்தித்தது தங்கள் வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்வாக இருப்பதாகவும் அவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

சென்னை, ஓசூா், மும்பை, திருப்பூா், திண்டுக்கல் என பல்வேறு இடங்களில் இருந்து வந்த 100க்கும் மேற்பட்ட பழைய மாணவிகள் காலை முதல் மாலை வரை பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com