தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்தநிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு விஜயகாந்த் உடல்நிலை மோசமாக உள்ளது எனச் சமூகவலைத்தளங்களில் செய்தி வெளியானது. இது தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கிடையில் தமிழக மக்களை நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்த போது, விஜயகாந்த்திற்கு மூச்சுத் திணறல் இருந்தது அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்தநிலையில் இதற்கெல்லாம் முற்றுப் புள்ளி வைக்கும் நோக்கில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண உடல் நலமுடன் இருப்பதாக வீடியோ ஒன்றை வெளியிட்டார். இதனால் தொண்டர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
இந்தநிலையில், தமிழகம் முழுவதும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் நலம் பெற வேண்டி அக்கட்சி தொண்டர்களும், ரசிகர்களும் சிறப்பு வழிபடு செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள திருநாவலூர் பக்தஜனேஸ்வரர் கோவிலில் 50க்கும் மேற்பட்ட தே.மு.தி.கவினர் விஜயகாந்த் பூரண குணமடைய வேண்டிச் சிறப்புப் பூஜை செய்து மண் சோறு சாப்பிட்டு பிரார்த்தனை செய்து வழிபட்டனர்.
இந்த சிறப்பு வழிபாட்டில் தே.மு.தி.க தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.