கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உயிரிழப்பு தொடர்பாக ஜிப்மர் மருத்துவ அறிக்கையை மாணவி தரப்பு வழக்கறிஞர்களிடம் தர விழுப்புரம் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் தனியார் பள்ளி மாணவி உயிரிழப்பு தொடர்பாக, மருத்துவ அறிக்கைகள் மற்றும் ஆய்வறிக்கையை கேட்டு மாணவி தரப்பு வழக்கறிஞர்கள் விழுப்புரம் மாவட்ட முதன்மை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனு செய்திருந்தனர். அந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இன்று கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற இரண்டாவது பிரேதப் பரிசோதனையை அறிக்கையை மட்டும் அவர்களிடம் வழங்கினார்.
மேலும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் மருத்துவ அறிக்கையை வழங்க இயலாது. வழக்கு விசாரணையில் உள்ளதால் இது விசாரணையை பாதிக்கும் என நீதிபதி மறுப்பு தெரிவித்துள்ளார். சென்னை உயர்நீதிமன்றம் அப்படி ஒரு ஆணையை வழங்கவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாணவி தரப்பு வழக்கறிஞர் காசி விஸ்வநாதன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது, “கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற இரண்டாவது பிரேதப் பரிசோதனை அறிக்கை நகல் மட்டும் வழங்கப்பட்டிருக்கிறது. புதுச்சேரி ஜிப்மர் ஆய்வு அறிக்கையை வழங்கவில்லை. வழக்கு விசாரணையை அது பாதிக்கும் என நீதிபதி அறிவித்திருக்கிறார். மாணவியின் தாயார் முதல்வரை சந்திக்க நடை பயணம் அறிவித்திருந்தது நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. தொழில்துறை அமைச்சர் கணேசன், முதல்வரை சந்திக்க அனுமதி பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார். எனவே நடைப்பயணம் ரத்து செய்யப்படுகிறது” இவ்வாறு தெரிவித்தார்.