செய்தியாளர்: பாலாஜி
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பெரும்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பரசு. இவர் கள்ளக்குறிச்சி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளரின் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அன்பரசின் தந்தை சங்கர் சாலை விபத்தில் உயிரிழந்தார்.
இந்நிலையில் அன்பரசுக்கும் சோழபாண்டியபுரம் கிராமத்தைச் சேர்ந்த சந்தியா என்பவருக்கும் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அப்போது தனக்காக சிறு வயது முதல் உழைத்த தந்தை தனது திருமணத்தில் கலந்து கொள்ள வேண்டுமென்று எண்ணிய காவலர் அன்பரசு, தனது தந்தையின் உருவத்தை மெழுகு சிலையாக வடிவமைத்தார்.
இதையடுத்து தந்தையின் மெழுகு சிலையை தனது திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்கச் செய்துள்ளார் அவர். இது உறவினர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் திருமண ஊர்வலத்தின் போதும் தனது தந்தை உடன் வருவது போல் அருகில் வைத்துக் கொண்டு வந்தது பார்ப்போரை நெகிழ செய்துள்ளது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் வரவேற்பையும் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.