கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் இதுவரை 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 21 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 21 பேரில் 5 பேரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி காவல்துறையினர் திட்டமிட்டு, நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்கின்றனர்.
கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து முதலில் 3 பேரல்கள் மெத்தனால் பறிமுதல் செய்யப்பட்டது. அதன்பிறகு 1800 லிட்டர் மெத்தனால் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில்தான், தலைமறைவில் உள்ள நபர்களை சிபிசிஐடி காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். குறிப்பாக இந்த சம்பவத்தில் 19 வயதான மாதேஷ் என்பவர் இந்த கடத்தல் கும்பலுக்கு தலைவனாக செயல்பட்டது சிபிசிஐடி அதிகாரிகளின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மொத்தமாக 21 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 19 வயதான மாதேஷ் என்பவர் எப்படி கடத்தல் கும்பலின் தலைவனாக செயல்பட முடியும் என்ற ரீதியிலும் விசாரணை தொடர்ந்து வருகிறது.
இந்த பின்னணியில் யார் யார் உள்ளனர் என்பது குறித்தும் விசாரிக்க சிபிசிஐடி காவல்துறையினர், மாதேஷ் உள்ளிட்ட 5 நபர்களை காவலில் எடுத்து விசாரிக்க கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய உள்ளனர்.
அதேவேளையில் சிபிசிஐடி அதிகாரிகள் பாதிக்கப்பட்ட மக்களிடமும் தங்களது விசாரணையை தொடர்ந்து வருகின்றனர். குறிப்பாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 112 நபர்களிடம் சிபிசிஐடி அதிகாரிகள் தங்களது விசாரணையை நடத்தி வருகின்றனர்.
இந்தப் பணியில் மட்டும் 50க்கும் மேற்பட்ட சிபிசிஐடி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். 93 நபர்களிடம் வீடியோ வாக்குமூலங்களையும் பெற்றுள்ளனர். மீதமுள்ள நபர்களிடமும் விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர்.