கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37 ஆக அதிகரித்துள்ளது. இதில் 4 பெண்களும் அடக்கம். இதில், கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் 22 பேரும், சேலம் மருத்துவமனையில் 8 பேரும், விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் 4 பேரும், புதுச்சேரி ஜிப்மரில் 3 பேரும் உயிரிழந்துள்ளனர்.
90க்கும் மேற்பட்டவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதியரசர் கோகுல்தாஸ் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. விசாரணை ஆணையம், சம்பவம் பற்றி முழுமையாக விசாரித்து பரிந்துரைகளை 3 மாதங்களில் வழங்கும் என்றும் இந்த விவகாரத்தில் தொடர்புடையோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அதேசமயத்தில் மெத்தனால் எங்கிருந்து கொண்டுவரப்பட்டது என்பதற்கான மூலக்காரணத்தை ஆராயவும், அதன் இருப்பைக் கண்டறிந்து அவற்றைக் கைப்பற்றி அழித்திடவும் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஆனால், மாவட்ட நிர்வாகத்தின் மீதும், காவல்துறையின் மீதுமே பாதிக்கப்பட்டவர்களது உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர். கள்ளச்சாராயத்தால் ஏற்பட்ட மரணம் என தகவல் கொடுத்தும், நிர்வாகமும், காவல்துறையும் போதுமான நடவடிக்கை எடுக்காததே இத்தனை உயிரிழப்புகளுக்கு காரணம் என தெரிவிக்கின்றனர். சாராய வியாபாரிகளுக்கான பின்புலத்தில் காவல்துறையினரும் இருப்பதாக குற்றச்சாட்டு இருக்கிறது.
இந்நிலையில், சேலம் டிஐஜி உமா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “உதவி மையங்கள் இருக்கின்றன. எல்லாப் பகுதிகளிலும் காவல்துறையினர் இருக்கின்றனர். ஏழு எஸ்பிக்கள் தலைமையில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அவர்களுக்குக் கீழ் கிட்டத்தட்ட 1000 காவல்துறையினர் இருக்கின்றனர். கள்ளக்குறிச்சி டவுன் முழுவதும் இந்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.