கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை அருகே உள்ள மொட்டையனூர் கிராமத்தில் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 55 மாணவ - மாணவிகள் பயின்று வருகின்றனர். இவர்களுக்குக் கடந்த 40 வருடத்திற்கு முன்பு கட்டப்பட்ட ஒரே பள்ளி அறை மட்டும் உள்ளது.
இந்த அறையில் பள்ளி அறை ஒருபுறமும், சமையல் அறை மற்றொருபுறம் செயல்பட்டு வருகின்றன. மாணவ- மாணவிகளுக்கு முறையான கழிப்பறை வசதி இல்லை. அது மட்டும் இல்லாமல் பள்ளி அறை கட்டடம் முழுவதும் பல இடங்களில் விரிசல் விட்டுக் காணப்படுகிறது. மேற்கூரை கான்கிரீட் பெயர்ந்து விழுவதால் மாணவர்களுக்குக் காயம் ஏற்படுவதாகப் புகார் தெரிவிக்கின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்ட திட்ட அலுவலரிடம் பள்ளியைக் கட்டடத்தைச் சீரமைத்துத் தரக் கோரி பலமுறை மனு அளித்தும் அதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்தநிலையில் தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் பள்ளிக் கட்டிடம் முழுவதும் ஆங்காங்கே தண்ணீர் ஒழுகி வருவதால் கட்டிடம் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் மாணவர்களின் பாதுகாப்பு கருதி பள்ளி வளாகத்தில் உள்ள மரத்தடி நிழலில் மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
எனவே மாணவர்களின் நிலையைக் கவனத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து புதிய கட்டடம் கட்டி தர வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து மாவட்ட கல்வித்துறை அதிகாரியைத் தொடர்பு கொண்டு கேட்டப்போது, "8.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடப் பணி தொடங்க உள்ளது. தற்காலிகமாக மாணவர்களுக்குச் சமுதாயக் கூடத்தில் பள்ளி இயங்க ஏற்பாடு செய்யப்படும்" என்றார்.