கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எறையூர்பாளையம் பகுதியில் டிப்டாப்பாக உடை அணிந்து கொண்டு 2 மர்ம நபர்கள் வந்துள்ளனர். அந்த பகுதிகளில் உள்ள பெண்களிடம் தங்களை அரசு அதிகாரிகள் என அறிமுகம் செய்து கொண்டுள்ளனர். பின்னர் மகளிர் உரிமைத்தொகை கிடைக்காதவர்களிடம் விசாரணை நடத்துவதற்காக வந்துள்ளோம் எனக் கூறி பல வீடுகளில் விசாரணை நடத்தியுள்ளனர்.
இந்தநிலையில் அதே பகுதியைச் சேர்ந்த சரோஜா என்பவர் வீட்டிற்குச் சென்ற அந்த ஆசாமிகள் இருவரும் சென்று மகளிர் உரிமைத் தொகை குறித்துக் கேட்டுள்ளனர். அதற்கு சரோஜா தனக்கு வரவில்லை என்று கூறியுள்ளார். அப்போது அவரது குடும்ப அட்டையைக் கொண்டு வரச் சொல்லி, அதிகாரிகள் போல் நடித்து இருவரும் விசாரணை நடத்தியுள்ளனர்.
பின்னர் மற்றொரு நபர் சரோஜாவிடம் “புகைப்படம் எடுக்க வேண்டும். நகைகளைக் கழற்றி வைத்து விட்டு ஆதார் அட்டையைக் கொண்டு வாருங்கள்” எனக் கூறியுள்ளார். அப்போது அதே இடத்தில் நகைகளைக் கழற்றி வைத்து விட்டு வீட்டிற்குள் சென்றுள்ளார். சரோஜா திரும்பி வருவதற்குள் அந்த இரண்டு நபர்களும் சரோஜா கழற்றி வைத்த இரண்டு லட்சம் மதிப்பிலான தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து சரோஜா அக்கம் பக்கத்தில் இருந்தவர்களிடம் கூறியுள்ளார். அவர்கள் வந்த இருசக்கர வாகனத்தின் பதிவு எண்களை அங்கிருந்த நபர்கள் பார்த்துள்ளனர். அதை வைத்துக் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் அந்த இருசக்கர வாகன நம்பரை வைத்து விசாரணை நடத்தியதில், கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள முத்துநாராயணபுரத்தைச் சேர்ந்த சரவணன் என்பதும், மற்றொருவர் கடலூர் அண்ணாநகர் கேப்பர் மலை சாலையில் உள்ள ஷாஜகான் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த ரூபாய் 2 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள், அவர்களைப் பயன்படுத்திய இருசக்கர வாகனம் மற்றும் 3 செல்போன் ஆகியவற்றைப் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மகளிர் உரிமைத் தொகை வாங்கி தருவதாகக் கூறி தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அந்த பகுதி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.