“தமிழ்நாட்டில் மத, இன மோதல்களை ஏற்படுத்தும் வகையில் பேசும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை, தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யுங்கள்” எனக்கோரி காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை பிரிவு சார்பில் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
தங்கள் புகாரில் அவர்கள், “மணிப்பூர் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தியபோது கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் குறித்து இழிவாக, மனம் புண்படும் வகையில் பேசியுள்ளார் சீமான். அமைதியாக உள்ள தமிழகத்தில் மத, இன மோதல்களை ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார். ஆகவே நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்” என கோரியிருந்தனர்.
நம்மிடம் பேசிய அவர், “சிறுபான்மையினர் பெரும்பான்மையினர் எனும் வாதத்தை இவர்கள் சாதியை வைத்து பிரிக்கிறார்களா, மதத்தை வைத்து பிரிக்கிறார்களா? சிறும்பான்மையினர் என சொல்லி ஆதிக்கம் படைத்தவர்களாக இருந்து பிரிவினைவாதத்தை ஏற்படுத்துபவர்கள் யார்? இடஒதுக்கீடு காரணமாக சிறுபான்மையினர் என சொல்கிறார்கள் என்றால், இடஒதுக்கீடு எதன் அடிப்படையில் வழங்கப்படுகிறது எனும் கேள்வி இருக்கிறதா, இல்லையா? இதுவரை சிறுபான்மையினரை பாதுகாக்கும் திட்டமாக நீங்கள் எதை சொல்லியுள்ளீர்கள்?
‘திமுக ஆட்சிக்கு வந்தால் அப்பாவி இஸ்லாமியர்களை விடுதலை செய்வோம்’ என சொன்னது திமுக தான். ஆனால் சிறைவாசிகள் பரோல் கேட்டபோது, 'இவர்களை வெளியில் விட்டாலும் பழைய சிந்தனையில் இருப்பார்கள், அதனால் இங்கிருக்கும் மக்களுக்கு ஆபத்து’ என சொன்னது யார்? பாதுகாக்கிறேன் என்ற பெயரில் அந்த மக்களை இழிவுபடுத்துவதும் பின்னோக்கி இழுப்பதும் அவர்களது உரிமையை பறிப்பதும் எவ்வளவு பெரிய முரண். அதனால் சீமான் அப்படி பேசினார். இப்போது போய் புகார் கொடுக்கும் காங்கிரஸ் சிறும்பான்மை அமைப்பு, ‘இஸ்லாமியர்களை இதுவரை விடுதலை செய்யவில்லையே’ என அப்போது ஏன் பேசவில்லை?
இவர்களுக்கு வேறு வேலையே இல்லை. திமுகவும், காங்கிரஸூம் சிறும்பான்மையினரின் காவலன் என்ற பிம்பம் உள்ளது. அந்த பிம்பத்தை ஒருவர் உடைக்கிறார். அவரை கைது செய்தால் தமிழ்நாட்டில் அதைப் பற்றி பேசுவதற்கு ஆள் கிடையாது” என்றார்.
“அந்த ஒரு மேடைகளில் மட்டுமல்ல.. பல மேடைகளில் மணிப்பூர் கலவரத்தை பற்றி பேசுகிறோம். இதை விட பன்மடங்கு கொடுமையை காங்கிரஸ் அரங்கேற்றியது. மணிப்பூர் பிரச்னைக்கு போராடும் காங்கிரஸ் என் இனத்தை கொன்றொழித்தது. அதை வேடிக்கை பார்த்துக் கொண்டுதானே இந்த திமுக இருந்தது. மணிப்பூரில் நடந்தது கொடுமையானது தான். அதனால்தான் ‘பாஜக மனித குலத்திற்கு இந்த உலகத்திற்கே எதிரானது’ என சொல்கிறோம். ஆனால் அதற்கு கொஞ்சம் கூட சளைக்காத காங்கிரஸ் - திமுக, அரசியலுக்காக மணிப்பூர் கலவரத்தை கையிலெடுத்து பேசுகிறதே... அதைத்தான் வன்மையாக கண்டிக்கிறோம்” என்றார்.
இவரது முழு பேட்டியை, கீழ் இணைக்கப்படும் வீடியோவில் விரிவாக காணலாம்.