’ஏவுகணை நாயகன்’ என்று போற்றப்பட்ட முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நினைவிடத்தை ராமேஸ்வரம் அருகில் உள்ள பேக்கரும்பு பகுதியில் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
அப்துல் கலாமின் முதல் நினைவு நாள் வரையில் நினைவிடத்திற்கான எந்த பணிகளும் தொடங்காமல் இருந்தது மக்களிடையே அதிருப்தியைஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில், இன்று திறக்கப்பட்ட கலாம் நினைவிடம் 9 மாதங்களில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
எப்படி இருக்கிறது நினைவிடம்?
பேக்கரும்பு பகுதியில் சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள அப்துல் கலாம் நினைவிடம், அவரது சாதனைகளைப் போற்றும் வண்ணம் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மொகலாயர் மற்றும் இந்திய கட்டிடக் கலையை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. நினைவிடத்துக்குள் கலாமின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவரின் நினைவுகளைப் பகிர்ந்துகொள்ளும் வண்ணம் 4 அறைகளில் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. நினைவிடத்தின் பிரதான நுழைவுவாயில் மும்பையில் உள்ள இந்தியா கேட்டை நினைவுபடுத்தும் விதமாகவும், கதவுகள் தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலின் கதவுகளைப் போலவும் வடிவமைக்கப்பட்டுள்ளன.
அதேபோல, கட்டிடத்தின் கூம்புவடிவக் கோபுரம் டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ளது போல வடிவமைக்கப்பட்டுள்ளது. ஏவுகணை நாயகனைக் கௌரவிக்கும் வகையில், அக்னி ஏவுகணை ஒன்றின் மாதிரியும் நினைவிடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் முதல் அணுகுண்டு சோதனையான போக்ரான் சோதனையில் கலாம் முக்கிய பங்காற்றியவர் என்பதால், அந்த நிகழ்வு குறித்த பிரத்யேக புகைப்படங்களும் நினைவிடத்தில் வைக்கப்பட்டுள்ளது.
பூக்கள் மீது பேரன்பு கொண்ட கலாமின் நினைவிட வளாகம் பூச்செடிகள் மற்றும் புற்கள் மூலம் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு குடியரசுத் தலைவர் மாளிகையின் மொஹல் தோட்டத்தின் வடிவமைப்பில் பணியாற்றிய பெங்களூருவைச் சேர்ந்த ஆர்ஐசி என்ற தனியார் நிறுவனம் ஈடுபடுத்தப்பட்டது. கடந்த ஜூலை 27ல் பிரதமர் மோடி திறந்துவைத்த அப்துல் கலாமின் முழுஉருவ வெண்கலச் சிலை நினைவிடத்துக்கு பின்புறம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கலாம் நினைவிடத்தில் இரண்டாம் கட்டமாக நூலத்துடன் கூடிய அறிவுசார் மையம், கோளரங்கம் மற்றும் மக்கள் கூடும் வகையிலான பெரிய அரங்கம் போன்றவை கட்டப்பட இருக்கின்றன. அடுத்த ஓராண்டில் இவை கட்டி முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.