புறா பந்தயம் முதல் ஆட்கடத்தல் வரை|‘Most Wanted’ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என்கவுன்டர்! நடந்ததுஎன்ன?

சென்னையின் மோஸ்ட் வாண்டட் ரவுடிகளில் ஒருவரான காக்காத்தோப்பு பாலாஜி என்கவுண்டர் செய்யப்பட்டது எப்படி? நடந்தது என்ன
 காக்காத்தோப்பு பாலாஜி
காக்காத்தோப்பு பாலாஜிமுகநூல்
Published on

சென்னையின் மோஸ்ட் வாண்டட் ரவுடிகளில் ஒருவரான காக்காத்தோப்பு பாலாஜி என்கவுன்டர்.

புறா பந்தயத்தில் தொடங்கி செம்மர கடத்தல், ஆட்கடத்தல் வரை.! சென்னையை ஆட்டிப்படைத்த காக்கதோப்பு பாலாஜி என்கவுன்டர் செய்யப்பட்டதன் பின்னணி?

வடசென்னையை கலக்கி வந்த பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி (41) இன்று அதிகாலை வியாசர்பாடி குடியிருப்பு அருகே வைத்து போலீசாரால் என்கவுன்டர் செய்யப்பட்டுள்ளார். காக்கா தோப்பு பாலாஜி மீது 5 கொலை வழக்கு, 15 கொலை முயற்சி வழக்குகள், 10 க்கும் மேற்பட்ட ஆட்கடத்தல் வழக்குகள் உட்பட 59 வழக்குகள் நிலுவையில் உள்ளன. 12 முறை குண்டர் தடுப்பு காவலிலும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில்,தொடர்ச்சியாக தலைமறைவாக இருந்து வந்த காக்கா தோப்பு பாலாஜியை இன்று அதிகாலை 4.50 மணியளவில் கொடுங்கையூர் காவல் ஆய்வாளர் சரவணன் என்கவுன்டர் செய்தார்.

என்கவுன்டர் செய்யப்பட்டது எப்படி?

கொடுங்கையூர் முல்லை நகர் மேம்பாலம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுப்பட்டு இருந்த நிலையில், கார் ஒன்றை மடக்கி சோதனையிட்டுள்ளனர்.

காரின் டிக்கியை சோதனை செய்வதற்காக ஓட்டுநர் அருகே இருந்த நபர் இறங்கி காரின் பின்பகுதியை சோதனையிட்ட போது கார் திடீரென புறப்பட்டு சென்றுள்ளது. இதனால், உடன் இருந்த நபரை போலீசார் பிடித்து விசாரணை செய்த போது காரினுள் இருப்பது பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என தெரியவந்ததால் அந்த காரை விரட்டி சென்றுள்ளனர்.

சென்னை வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையம் அருகே உள்ள பிஎஸ்என்எல் குடியிருப்பு பகுதிக்கு சென்ற காக்கா தோப்பு பாலாஜி காரை விட்டுவிட்டு புதரை நோக்கி ஓடியுள்ளார். அப்போது, போலீஸ் வாகனம் வருவதை கண்டு போலீசாரை நோக்கி தான் வைத்து இருந்த கள்ளத்துப்பாக்கியால் சுட்டுள்ளார் காக்கா தோப்பு பாலாஜி. இதனால், போலீஸ் வாகனத்தின் பேனட் மற்றும் கண்ணாடியில் இரண்டு தோட்டாக்கள் பாய்ந்துள்ளது.

பின்னர், தற்காப்புக்காக காவல் ஆய்வாளர் சரவணன் சுட்டதில் காக்கா தோப்பு பாலாஜியின் மார்பில் குண்டு பாய்ந்தது. இதனால், ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். ஆனால், வரும் வழியிலேயே அவரின் உயிர் பிரிந்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, காக்கா தோப்பு பாலாஜியின் உடலானது பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. சம்பவம் நடந்த வியாசர்பாடி குடியிருப்பில் , உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், என்கவுன்டர் சம்பவம் தொடர்பாக மேஜிஸ்திரேட் உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

யார் இந்த காக்கா தோப்பு பாலாஜி?

சென்னை பிராட்வே காக்கா தோப்பு பகுதியில் ராமலிங்கம் என்பவரின் மகன் பாலாஜி. 9-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். காக்காதோப்பில் பிறந்து வளர்ந்ததால், காக்கா தோப்பு பாலாஜி என்ற அடைமொழி வந்த நிலையில், புறா பந்தயம் வளர்ப்பில் அதிக ஈடுபாட்டுடன் இருந்த காக்கா தோப்பு பாலாஜிக்கு அப்போது சிறு சிறு அடிதடி போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது.

பொதுமக்கள் பாலாஜியை பார்த்தாலே பயம் ஏற்பட வேண்டும் என்ற நோக்கில், ரவுடி தாமுவின் அண்ணன் புஷ்பாவை முதல் முறையாக காக்கா தோப்பு பாலாஜி ஸ்கெட்ச் போட்டு கொலை செய்தார்.

பின்னர் யார் பெரியவன் என்ற நோக்கில் செயல்பட்டு வந்த காக்கா தோப்பு பாலாஜி வடசென்னையை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டார். இதற்கு தடையாக இருந்த சதீஷ் என்பவரை 2009 ஆம் ஆண்டு கொலை செய்தார்.

அதன்பிறகு 2011 ம் ஆண்டு வீட்டின் மேற்கூறையை உடைத்து உள்ளே இறங்கி பில்லா சுரேஷ் என்பவரை அவரது மனைவி கண் முன்னே வெட்டி படுகொலை செய்தார். அடுத்த சில மணி நேரங்களில் விஜி (எ) விஜயகுமாரையும் காக்காத்தோப்பு பாலாஜி தரப்பு வெட்டிப் படுகொலை செய்தது. இந்த இரட்டை கொலை சம்பவம் இப்போது வரை காக்கா தோப்பு பாலாஜி பெயர் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், செம்மர கடத்தல் பிசினஸிலும் கால் வைத்தார் காக்கா தோப்பு பாலாஜி.

தற்போது, வடசென்னையை ஆட்டிப்படைக்கும் சம்போ செந்திலுக்கும், காக்கா தோப்பு பாலாஜிக்கும் இடையே யார் பெரியவன் என்ற போட்டி சமீப காலமாகவே நடந்து வருகிறது. இதற்காக மாறி மாறி தாக்குதல் சம்பவங்களும் நடைபெற்று வந்துள்ளது.

அந்த வகையில் கடந்த 2021 ஆம் ஆண்டு தேனாம்பேட்டையில் வழக்கு ஒன்றில் ஆஜராகி விட்டு ரவுடிகளான சிடி மணி மற்றும் காக்கா தோப்பு பாலாஜி ஆகியோர் காரில் சென்ற போது, தேனாம்பேட்டை அருகில் வைத்து நாட்டு வெடிகுண்டை காரின் மீது சம்பவம் செந்தில் வீசினார். அதிர்ஷ்டவசமாக இருவரும் உயிர் தப்பினர்.

போலீசாரின் கிடுக்குப்பிடி காரணமாக கடந்த சில வருடங்களாக நேரடி சம்பவத்திற்குள் நுழையாமல் ஸ்கெட்ச் மட்டும் போட்டு கதையை முடிக்கும் தொழிலையே காக்கா தோப்பு பாலாஜி செய்து வந்ததாகவும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

 காக்காத்தோப்பு பாலாஜி
சென்னை | தூங்கிக் கொண்டிருந்தவர் மீது ஏறி இறங்கிய கார் - சிசிடிவி காட்டிக்கொடுத்த சம்பவம்

கடைசியாக கடந்த 2021 ஆம் ஆண்டு ஆர்.கே நகர் காவல் நிலையத்தில் ஆயுத தடை சட்டம் வழக்கில் காக்கா தோப்பு பாலாஜி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதன்பிறகு, ஜாமீனில் வெளியே வந்த காக்கா தோப்பு பாலாஜி அதன் பிறகு தொடர்ச்சியாக தலைமறைவாக இருந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.

போலீசார், காக்கா தோப்பு பாலாஜி தீவிரமாக தேடி வந்த நிலையில் இன்று வாகன தணிக்கையின் போது போலீசாரை நோக்கி சுட்ட போது எதிர் தாக்குதல் நடத்தி என்கவுன்டர் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. புதிய காவல் ஆணையராக பொறுப்பேற்ற அருண் பொறுபேற்ற கொண்ட பின் சென்னையில் நடக்கும் இரண்டாவது என்கவுன்டர் இது.

மேலும், கடந்த முறை ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட திருவேங்கடம் இதே காவல் ஆய்வாளர் சரவணனால் என்கவுண்டர் செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com