சென்னை-கடலூர் இடையே கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்த ‘கஜா’ புயல், கடலூர்-பாம்பன் இடையே கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள கஜா புயல் வரும் 15ஆம் தேதி சென்னை மற்றும் கடலூர் இடையே கரையைக் கடக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது. ‘கஜா’ புயல் காரணமாக வரும் 14 ஆம் தேதி இரவு முதல் தஞ்சை, காரைக்கால், திருவாரூர், நாகை, கடலூர், புதுச்சேரி, விழுப்புரம் மாவட்டங்களில் பலத்த காற்று வீசும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் புயலால் 80 முதல் 100 கிலோமீட்டர் வரையிலான வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும், கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்திருந்தார்.
இந்தப் புயலால் மேலே குறிப்பிட்டு தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களின் சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டிருந்தது. புயல் காரணமாக வரும் 15ஆம் தேதி வரை கடலுக்குச்செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டிருந்தது. சென்னையை பொருத்தவரை பெரிய பாதிப்பு இருக்காது என்றும், மழை இயல்பான அளவில் பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் ‘கஜா’ புயல் கடலூர்-பாம்பன் இடையே 15ஆம் தேதி கரையை கடக்கும் என்ற புதிய தகவலை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் கன மழை பெய்யும் மாவட்டங்களின் நிலை மாறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னர் வெளியான அறிவிப்பில் சென்னையில் இயல்பான காற்று வீசும், மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது புயல் கடக்கும் திசை மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.