தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் தின்பண்டங்கள் மற்றும் பார்க்கிங் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் உணவு பொருட்கள், குடிநீர், குளிர்பானம் போன்றவை அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. இதற்காகவே பலர் இந்தத் திரையரங்குகளுக்கு செல்ல தயங்குகின்றனர். மேலும் வெளியில் இருந்து கொண்டு வரப்படும் தின்பண்டங்களையும் குடிநீரையும் திரையரங்கு நிர்வாகங்கள் அனுமதிப்பதில்லை. இதைக் கண்டித்து பல்வேறு போராட்டங்கள் ஆங்காங்கே நடந்து வருகிறது. சில மாநில உயர்நீதிமன்றமும் இந்த விவகாரத்தில் அரசுக்கு கேள்வி எழுப்பி இருந்தது. இந்நிலையில் மகாராஷ்டிர சட்டப்பேரவையில் இந்த விவகாரத்திற்கு முற்றுபுள்ளி வைத்து, திரையரங்குகளில் வெளியில் இருந்து உணவு பொருட்களை கொண்டு செல்ல தடையில்லை என்று கூறியது. மேலும் வெளியில் இருந்து உணவு பொருட்களை கொண்டு வர அனுமதிக்காத திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியது.
இதனைத் தொடர்ந்து இதே போல மற்ற மாநிலங்களில் உள்ள மல்டிபிளக்ஸ் திரையரங்கங்களிலும் கொண்டு வரப்பட வேண்டும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்நிலையில் அதனை கருத்தில் கொண்டு தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் உணவுப்பொருள், தின்பண்டங்கள் மற்றும் பார்க்கிங் ஆகியவைக்கு கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். இதனை கடம்பூரில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்த பிறகு செய்தியாளர்களுக்கு தெரிவித்தார். இதனால் தமிழக ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.