தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், அதிமுக சார்பில் மே தினவிழா பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜூ கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “இந்த 2 ஆண்டு திமுக ஆட்சியில் எவ்வித திட்டங்களும் கொண்டு வரப்படவில்லை. திமுக ஆட்சிக்கான கவுண்டவுன் தொடங்கி விட்டது. ஆட்சிக்கான நாள் குறிக்கப்பட்டுவிட்டது. வரும் 2024ல் நாடாளுமன்ற தேர்லுடன் சட்டமன்ற தேர்தல் வரும் சூழல்நிலை உள்ளது.
தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆடியோ விவகாரம் பெரிதான பிறகு, அது போலியானது என அவர் விளக்கம் கொடுக்கிறார். அந்த ஆடியோ விவகாரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி புகார் கொடுத்துள்ளார். இனி அவர்கள் தப்பிக்க முடியாது.
தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை பாராட்ட வேண்டும். ஏனெனில் அவர் தெரிந்து தான் பேசி உள்ளார்.
கடம்பூர் ராஜூ
திமுகவினர் செய்யும் அட்டூழியம் தாங்கமால், ‘இந்த ஆட்சி இருந்தாலும் ஒன்றுதான்; இல்லாமல் போனாலும் ஒன்றுதான்’ என்ற முடிவுடன் அவர் பேசியுள்ளது தெரிகிறது. திமுக ஆட்சிக்கு உலைவைக்க அவர்கள் அமைச்சரவையில் ஒரு அமைச்சர் இருந்துள்ளார் என்பது மகிழ்ச்சியான விஷயம். அவருக்கு அதிமுக சார்பில் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்” என பேசினார்.