அரசு பஸ் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் கடலூரில் தற்காலிக பேருந்து ஓட்டுநரால் விபத்து ஏற்பட்டுள்ளது.
கடலூரில் மொத்தமாக 9 அரசு பனிமனைகள் உள்ளது. இங்கு 500க்கும் அதிகமான பேருந்துகள் உள்ளன. 4ஆயிரம் தொழிலாளர்களும் வேலை செய்து வருகின்றனர். இதில் 90 சதவீதத்திற்கு அதிகமான தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பேருந்துகள் பெரும்பாலும் இயக்கப்படாததால் பணிமனை அதிகாரிகள் தற்காலிக ஓட்டுநரை வைத்து பேருந்துகளை இயக்க முயற்சி செய்து வருகின்றனர்.
அதனடிப்படையில் கடலூர் அரசு பணிமனையில் ஒரு தற்காலிக ஓட்டுநர் பேருந்தை இயக்க முன்வந்துள்ளார். அவர் முன் அனுபவம் இல்லாதவர் என்றும் ஆட்டோ ஓட்டுநர் என்றும் கூறப்படுகிறது. அவர் பேருந்தை இயக்கும்போது அருகில் இருந்த பேருந்து மீது வேகமாக மோதியுள்ளார். இதையறிந்த போராட்டக்காரர்கள் பொதுமக்கள் உயிருடன் விளையாட வேண்டாம் எனக்கூறி பணிமனையை முற்றுகையிட்டனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டக்காரர்களை சமாதானப்படுத்தினர். இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் எனவும் உறுதியளித்துள்ளனர்.